2011-08-17 16:25:20

ஆகஸ்ட் 18, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


மங்கோலியப் பேரரசை நிறுவிய மங்கோலிய அரசர் செங்கிஸ் கான் 1162ம் ஆண்டு பிறந்தார். 1206ல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். இவரது இயற்பெயர் தெமுசின் போர்சிகின் என்பதாகும். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இவர் அனைத்து மாங்கோலியர்களையும் ஒன்று திரட்டி ஒரே தலைமைத்துவத்தின் கீழ் கொண்டுவந்து, அவர்களுக்குப் போர்முறைகளையும் பயிற்சியையும் போர்த் தந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார். உலகிலேயே திறமை மிக்கதாக விளங்கிய அந்த மாங்கோல் கூட்டம் மிகவும் ஒற்றுமையாக அவர் தலைமையின்கீழ் இயங்கி சீனா, பாரசீகம், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பாவின் பகுதி, ரஷ்யா ஆகிய இடங்களைப் பிடித்தது. இந்நாள்வரை எந்த ஒரு தனி மனிதனும் தன்னுடைய படைகளின் மூலம் இவ்வளவு நிலப்பரப்பை அவ்வளவு குறுகிய காலக் கட்டத்துக்குள் கைப்பற்றியதேயில்லை என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.
வாள், குறுங்கத்தி, எறிகத்தி, குதிரை, எறி ஈட்டிகள், வில், அம்பு, கொஞ்சம் வெடிமருந்து, கோட்டைகளுக்குள் உள்ள மக்களைத் தாக்கக் கவண் எந்திரங்கள், இவ்வளவுதான் மங்கோலியப் படைகளிடம் இருந்தவை. எதிர்பாராத இடங்களில் படைகளை அனுப்புதல், இரவு பகல் என்று பாராமல் பயணம் செய்து தூரங்களைக் கடத்தல், தாக்குதலில் மரபுகள் ஏதும் இல்லாத தாக்குதல், அழிப்பில் எந்த வரம்புமில்லா அழிப்பு ஆகியன மங்கோலியப் படைகள் பற்றிய பெரும் பீதியை மத்திய ஆசியாவெங்கும் பரப்பியிருந்தன.
தன் 65 ஆண்டு வாழ்வுக்குள் பல இலட்சம் மக்களைக் கொன்று குவித்தான் செங்கிஸ் கான். ஒரு தோராயமான கணக்கில் செங்கிஸ் கான் கொன்ற மக்கள் தொகை 4 கோடி என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். மங்கோலியப் பேரரசை அமைத்த மன்னர் செங்கிஸ் கான், 1227ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.