2011-08-16 16:28:24

விவிலியத்
தேடல் திருப்பாடல் 68


RealAudioMP3 “Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility” (William Wordsworth)
"சக்திவாய்ந்த உணர்வுகள் எதார்த்தமாகப் பொங்கி வருவதே கவிதை. இந்த உணர்வுகளை அமைதியில் திரட்டி எண்ணுவதே கவிதையின் ஆரம்பம்" என்று புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் William Wordsworth கவிதைக்கு ஓர் இலக்கணம் கூறியுள்ளார். உள்ளத்தில் பொங்கி வரும் உணர்வுகளின் வடிகால் கவிதை என்று சொல்லும் William Wordsworth, அதே மூச்சில் அந்த உணர்வுகளை அமைதியாக எண்ணிப்பார்ப்பதையும் கூறியுள்ளார்.
இன்று நம் விவிலியத் தேடலில் சிந்திக்கவிருக்கும் திருப்பாடல் பல உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள ஒரு திருப்பாடல். மகிழ்ச்சி, பெருமை, கோபம், ஏக்கம், என்று பல உணர்வுகளின் சங்கமம் இது. இதை வடித்த ஆசிரியர் இந்த உணர்வுகளை அமைதியில் அமர்ந்து திரட்டி, சிந்தித்து எழுதியதைப் போல் தெரியவில்லை. மனதில் எழுந்த எண்ணங்களை, உணர்வுகளை அப்படியே கொட்டியிருப்பதுபோல் இந்தத் திருப்பாடல் அமைந்துள்ளது. எனவேதான், இத்திருப்பாடலுக்கு விளக்கம் சொல்வது கடினம் என்று விவிலிய ஆய்வாளர்கள் சொல்லியிருக்கின்றனர். இத்திருப்பாடலில் எண்ணம் உணர்வு ஆகியவற்றின் மலை முகடுகளும், மிக ஆழமான பள்ளங்களும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கத்தில் இருப்பதால், விளக்கம் சொல்பவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்தக் கருத்தை வாசித்தபோது, இது ஒரு சவாலைப் போல் ஒலித்தது. எனவே, இந்தத் திருப்பாடலை வாசித்தேன். அவர்கள் சொல்லியிருப்பதுபோல், பல எண்ணங்களின், உணர்வுகளின் சங்கமமாக விளங்கும் திருப்பாடல் 68ஐ நாம் இன்று நம் தேடலுக்கு எடுத்துக் கொள்வோம்.

"இறைவனின் வெற்றிப்பவனி" என்ற தலைப்புடன் எழுதப்பட்டிருக்கும் 68ம் திருப்பாடலின் பொருளை உணர்ந்துகொள்ள, இப்பாடலின் பின்னணியைத் தெரிந்து கொள்வது நலம். இஸ்ரயேல் மக்களுக்கும் பெலிஸ்தியர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தன. பெலிஸ்தியர்களின் மாவீரனாக, பெரும் உடல் பலம் வாய்ந்தவனாக இருந்த கோலியாத்தை ஆடுமேய்க்கும் சிறுவனாக இருந்த தாவீது கவண்கல் கொண்டு வீழ்த்தியதை நாம் அறிவோம். (I சாமுவேல் 17: 41-54)
இஸ்ரயேல் மக்களுக்கும் பெலிஸ்தியர்களுக்கும் இடையே நடந்த சண்டைகளில் இஸ்ரயேல் மக்களின் பக்கம் இறைவன் இருந்ததை பெலிஸ்தியர்கள் பலமுறை உணர்ந்திருந்தனர். இறைவன் அவர்கள் பக்கம் இருந்தததற்குக் காரணம்? உடன்படிக்கையின் பேழையும், அதில் தங்கியிருந்த இறைவனும். அப்பேழையைத் தாங்கள் எடுத்துச் சென்றால், இறைவன் தங்கள் பக்கம் இருந்து, தங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார் என்று பெலிஸ்தியர்கள் தப்புக் கணக்கு போட்டு, பேழையைப் பறித்துச் சென்றனர்.
பலவந்தமாகப் பறித்துச் செல்லப்பட்ட இறைவனின் பேழை பெலிஸ்தியர்கள் பக்கம் சென்றதிலிருந்து, அவர்களைத் துன்பங்கள் அடுக்கடுக்காய்த் துரத்தி வந்தன. எனவே, அவர்கள் பேழையை மீண்டும் இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த பகுதியில் விட்டுச் சென்றனர். அந்தப் பேழையை எருசலேம் நகருக்குள் ஒரு வெற்றிப் பவனியாக எடுத்து வரும் நிகழ்வை தாவீது இந்தப் பாடல் வழியாகக் கூறியிருக்கிறார். இதுவே இத்திருப்பாடலின் பின்னணி.

உடன்படிக்கைப் பேழைக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் உள்ள உறவு மோசே காலத்தில் ஆரம்பமான ஒன்று. பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்கள் அலைந்து திரிந்தபோது அவர்களுடன் இறைவனும் பயணித்தார். அம்மக்கள் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் பேழை அவர்களுக்கு முன் செல்லும் அந்த நிகழ்வை நாம் எண்ணிக்கை நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:
எண்ணிக்கை 10 34-36
அவர்கள் பாளையத்திலிருந்து புறப்பட்டபோதெல்லாம் ஆண்டவரின் மேகம் பகலில் அவர்கள்மேல் இருந்தது. பேழை புறப்படும்போதெல்லாம் மோசே, “ஆண்டவரே! எழுந்தருளும் உம் பகைவர் சிதறுண்டு போகட்டும் உம்மை வெறுப்போர் உம் முன்னின்று ஓடியொளியட்டும்என்று கூறுவர். அது தங்கும்போதோ அவர், “ஆண்டவரே! பல்லாயிரவரான இஸ்ரயேலிடம் திரும்பும் என்பார்.

இஸ்ரயேல் மக்கள் பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுடன் பயணம் செய்யும் இறைவனிடம் அவர்கள் முதலில் கேட்டது பாதுகாப்பு... எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு. பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு இயற்கையே ஒரு எதிரியாக இருந்தது. போர் புரிவதற்கென எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் பயணம் செய்த பல்லாயிரம் இஸ்ரயேல் மக்கள், பாலை நிலத்தில் அலைந்த நாற்பது ஆண்டுகளும், அப்பகுதியில் வாழ்ந்த பல்வேறு இனத்தவரும் தாக்குவதற்கு ஏற்ற எளிதான ஓர் இலக்காக அமைந்தனர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதுகாப்பு இறைவனின் பிரசன்னம். பேழை புறப்படும்போதெல்லாம் மோசே இறைவனை நோக்கிக் கூறிய இந்த வரிகளின் எதிரொலி போல 68ம் திருப்பாடலின் முதல் வரிகள் அமைந்துள்ளன.
திருப்பாடல் 68: 1-2
கடவுள் எழுந்தருள்வார்: அவருடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்கள்: அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்: புகை அடித்துச் செல்லப்படுவது போல அடித்துச் செல்லப்படுவர்: நெருப்புமுன் மெழுகு உருகுவது போலக் கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்.

35 திருவசனங்களைக் கொண்ட திருப்பாடல் 68ல் நான்கு பகுதிகள் உள்ளன. முதல் 6 திருவசனங்களில் இறைவன் தன் மக்களுக்குச் செய்யும் நன்மைகளை ஆசிரியர் கூறுகிறார். இறைவனின் வரவால் முதலில் கிடைப்பது பாதுகாப்பு... இறைவன் இந்தப் பாதுகாப்பை திக்கற்றவர்களுக்கு, கணவனை இழந்த கைம்பெண்களுக்கு, தனித்திருப்போருக்கு, மற்றும் சிறைப்பட்டோருக்கு முக்கியமாகத் தருகிறார் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பாடல் 68: 5-6
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்: சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்.
இன்றைய உலகிலும் நாடு விட்டு நாடு நாடோடிகளாய்த் துரத்தப்படும் ஏழை மக்கள், நாட்டிற்குள்ளேயே அகதிகளாய் வாழும் ஏழை மக்கள் ஆகியோரின் வாழ்வுப் பயணத்தில் அவர்களது ஒரே நம்பிக்கை இறைவன் மட்டுமே.
அனாதைகள், கைம்பெண்கள், சிறைப்பட்டோர் ஆகியோரைக் குறித்து பல விவிலியப் பகுதிகள் உள்ளன. நமக்கு அதிகம் பழக்கமான இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நினைவுக்கு வரலாம். லூக்கா நற்செய்தியில் இயேசு முதன்முறை தொழுகைக் கூடத்தில் பேச எழுந்ததும், இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து அவர் வாசித்த வரிகள் இவை:
இறைவாக்கினர் எசாயா 61: 1-3
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும்... என்னை அனுப்பியுள்ளார்.

திருப்பாடல் 68ன் முதல் ஆறு திருவசனங்களில் கடவுள் ஆற்றும் செயல்களைக் கூறும் ஆசிரியர், இப்பாடலின் இறைவசனங்கள் 7 முதல் 18 வரையிலான இரண்டாவது பகுதியில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து கிளம்பி, கடல் நடுவிலும், பாலை நிலம் வழியாகவும் நடந்த நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுகிறார். இறைவசனங்கள் 19 முதல் 31 வரையிலான மூன்றாம் பகுதியில் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்து செல்லும் பவனியில் நடக்கும் செயல்பாடுகளையும், அந்தப் பவனியின் நாயகரான இறைவனின் செயல்பாடுகளையும் ஆசிரியர் விவரிக்கின்றார்.
முன்னால் பாடகரும் பின்னால் இசைக்கருவிகளை வாசிப்போரும், நடுவில் தம்புரு வாசிக்கும் பெண்களும் சென்றனர். எகிப்திலிருந்து அரச தூதர் அங்கே வருவர்: கடவுள்முன் எத்தியோப்பியர் கைகூப்பி நிற்க விரைவர். (திருப்பாடல் 68: 25,31)
என்று பவனியில் நடக்கும் நிகழ்வுகளைக் கூறும் ஆசிரியர், பவனியில் வரும் இறைவனின் செயல்களையும் ஆங்காங்கே விவரிக்கிறார். இறைவனின் செயல்களை ஒரு வேண்டுகோளாகவும் இறைவன் முன் வைக்கிறார்.
நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்: நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். அவர் தம் எதிரிகளின் தலையை உடைப்பார்: தம் தீய வழிகளில் துணிந்து நடப்போரின் மணிமுடியை நொறுக்குவார்.
கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! மக்களினங்களாகிய கன்றுகளோடு வருகிற காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்: வெள்ளியை நாடித் திரிவோரை உமது காலடியில் மிதித்துவிடும்: போர்வெறி கொண்ட மக்களினங்களைச் சிதறடியும். (திருப்பாடல் 68: 20-21, 28-30)

32 முதல் 35 வரையிலான இறுதிப் பகுதியில் உலகில் உள்ள அரசர்களே, கடவுளின் உண்மையான வலிமையை உணர்ந்து அவருக்கு முன் பணிந்து வணங்குங்கள் என்று ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். அரசன் முதல் ஆண்டி வரை ஆண்டவன் முன் சமம் என்பதையும் கடவுள் முன் பணிவதே அனைவருக்கும் நலமான வழி என்பதையும் இத்திருப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.
இவ்வாறு இறை பிரசன்னம் தரும் பாதுகாப்பு, அதுவும் திக்கற்றவர்களுக்கு, கைம்பெண்களுக்கு, சிறைப்பட்டோருக்கு என்று சிறப்பாக இறைவன் தரும் பாதுகாப்பைப் பற்றி இத்திருப்பாடலின் ஆரம்பத்தில் கூறிய ஆசிரியர், பின்னர் செங்கடல், பாலை நிலம் ஆகியவற்றில் இஸ்ரயேல் மக்களுக்கு நடந்ததைக் கூறுகிறார். பின்னர் உடன்படிக்கைப் பேழை எடுத்துச் செல்லப்படும் பவனியில் நடை பெறும் செயல்பாடுகளை, அப்பவனியின் நாயகனாய் வரும் இறைவனின் செயல்பாடுகளை விவரிக்கும் ஆசிரியர், இறுதியில் உலக மன்னர்களிடம் இறைவனைப் பணிந்து வணங்குமாறு அழைப்பு விடுக்கிறார். இவ்வாறு பல்வேறு எண்ணங்களின், உணர்வுகளின் சங்கமமாக உள்ளது திருப்பாடல் 68.








All the contents on this site are copyrighted ©.