2011-08-15 13:26:17

வாரம் ஓர் அலசல் – மனிதாபிமானத் தூதர்களாக இருப்போம்


ஆக.15,2011. ஏறக்குறைய நான்காயிரம் வருடங்கள் தொடர் வரலாற்றைக் கொண்ட சீனா உலகின் மிகப் பழமையானக் கலாச்சாரங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இன்று உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் பல வடிவ, பலவண்ண சீன உற்பத்திப் பொருட்களைக் காண முடிகின்றது. சீனா, அசுர வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் மனித உரிமை மீறல்கள், சமய சுதந்திரம் மறுக்கப்படல் போன்ற விவகாரங்களுக்கும் அடிக்கடி உலகினரால் கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது. கடந்த வாரத்தில் நாமும், மனிதமற்ற ஒரு சீனச் செய்தியை ஊடகம் ஒன்றில் புகைப்படத்துடன் பார்த்தோம். அதில் ஒரு 12 வயது சீனச் சிறுவன் நாயுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான். இன்றைய நவ நாகரிக உலகில் இப்படியும் நடக்கின்றதே என்ற அதிர்ச்சியுடன் அச்செய்தியை முழுமையாக வாசித்தோம். வடகிழக்குச் சீனாவின் Heilongjiang மாகாணத்தில் உள்ள Erlongshan என்ற கிராமத்தில் இந்த 12 வயதுச் சிறுவன், தனது மாமாவின் வீட்டிற்கு வெளியே நாயுடன் கட்டி வைக்கப்பட்டுள்ளான். மனநிலை பாதிக்கப்பட்டதால் அவனது மாமா Cai Quan, தனது சொந்தப் பாதுகாப்பு கருதி இரண்டு வருடங்களாக இவ்வாறு நாயுடன் சேர்த்து சங்கிலியால் கட்டி வைத்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவனது மாமா, சிறுவனால் பேச முடியாது. தாமதமாகவாவது பேசுவான் என்று அவரது பெற்றோர்கள் நம்பினார்கள். ஆனால் அவன் மனத்தளவில் ஊனமுற்றவனாகக் காணப்படுகின்றான் என்று தனது செயலுக்கு நியாயம் சொல்லியிருக்கிறார்.
அன்பர்களே, மனிதம், மனிதாபிமானம் என்றெல்லாம் வாய்வலிக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம். மேடை போட்டு முழங்கிக் கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிராவின் கோலாப்பூர் என்ற ஊரில் பள்ளி அனுமதியின்றி கால்பந்து போட்டிகளில் பங்கேற்கச் சென்ற 20க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பள்ளிகளில் அடைத்து வைத்து தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியா தனது 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இத்திங்களன்று செய்தி வெளியாகியிருந்தது. கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில் இக்குழந்தைகளைப் பள்ளியில் உள்ள அறை ஒன்றில் அடைத்து வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வாசித்தோம். சாலையைக் கடக்க முடியாமல் தயங்கி நிற்கும் மனிதர்க்குக் கை கொடுக்க நேரமில்லை என்று மனிதாபிமானத்துக்குச் சாக்குப்போக்குச் சொல்லும் ஆட்களும் உள்ளனர்.
இலங்கையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் சிறுவர்கள் கடும் பசி பட்டினி காரணமாக, உயிராபத்தையும் கவனத்தில் கொள்ளாது, கண்ணிவெடி உள்ளிட்ட வெடிபொருட்களின் ஆபத்தான இரும்புத் துண்டுகளையும், சிதறிக்கிடக்கும் இரும்புத் துண்டுகளையும் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இச்சிறுவர்கள், போர் காரணமாக பெற்றோரை இழந்த மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இராணுவத்தினால் பாதுகாப்பற்ற இடங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் இச்சிறார் சென்று இரும்புத் துண்டுகளைச் சேகரித்து வருகின்றனர் எனக் கடந்த சனிக்கிழமை செய்தியில் வாசித்தோம். இலங்கையின் வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மனிதாபிமானம் கொண்ட மனிதர்கள் தேடப்படுகிறார்கள். பதவியைத் தக்க வைக்கவோ வேறுபல சுயநலக் காரணங்களுக்காகவோ மனிதாபிமானப் பண்புகளை வெளிப்படுத்தும் தலைவர்கள் அல்ல, உண்மை உள்ளம் கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் வடகிழக்கு ஆப்ரிக்காவின் சொமாலியா, கென்யா, எத்தியோப்பியா, திஜிபுத்தி போன்ற நாடுகளில் தினமும் எத்தனையோ பசிச்சாவுகள். சொமாலியாவில் மனிதாபிமானப் பணிசெய்யும் டாக்டர் Omar Saleh சொல்கிறார்....
எனது சேவை எங்கு தேவையோ அங்கு நான் இருக்க வேண்டும். எமது சேவையை எதிர்நோக்கும் இம்மக்கள் எனது தந்தையர், தாய்மார், சகோதர சகோதரிகள் மற்றும் பிள்ளைகள் போன்றவர்கள். எந்த ஒரு மனித உயிரும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டிருக்க உரிமை கொண்டிருக்கிறது. துன்புறும் இம்மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளைச் செய்கிறேன் என்று.
ஆப்கானிஸ்தானில் 2009ம் ஆண்டில் போர் வலுவடைந்த பின்னர் வன்முறைகள் அதிகரித்து விட்டன. அதனால் அப்பாவி மக்களின் நிலைமையும் மோசமாக உள்ளது. உலகில் 2010ல், 92 கோடியே 50 இலட்சம் பேர் கடும் பசிக் கொடுமையை எதிர்நோக்கினர். ஆசிய-பசிபிக்கில் இவ்வெண்ணிக்கை 57 கோடியே 80 இலட்சம். உலகில் ஒவ்வொரு நாளும் பசி தொடர்புடைய நோயினால் 16 ஆயிரம் சிறார் இறக்கின்றனர். தூக்க நோய், குடல்புண் போன்ற புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களால் நாற்பது கோடிக்கு மேற்பட்டோர் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். உலகில் எய்ட்ஸ் நோய்க் கண்டறியப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும், இன்னும் அந்நோயாளிகள் பாகுபடுத்திப் பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் பிற நாடுகளுக்குச் செல்வதற்கும் அங்கு படிப்பதற்கும் தொழில் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறார்கள். சுமார் அறுபது நாடுகளில் இம்மாதிரியான கெடுபிடிகள் இருக்கின்றன. ஓர் எடுத்துக்காட்டு.
இராகுல். இவர் மூன்றாண்டுகளாக ஓர் அந்நிய நாட்டில் தையல் கடையில் வேலை செய்து வந்தார். இவர் தனது தங்கும் அனுமதியைப் புதுப்பிப்பதற்காக மருத்துவப் பரிசோதனை செய்த போது எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வந்தது. உடனே இராகுல் கைது செய்யப்பட்டு கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் 15 நாட்கள் அந்த மருத்துவமனையில் சிறிய அறையில் வைக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். சொந்த நாட்டில் இராகுலைக் குடும்பமும் ஒதுக்கியது. மனைவியும் விவாகரத்து செய்தார். எப்படியோ ஓர் எய்ட்ஸ் நோய்க்காப்பாளர் மையத்தின் துணையுடன் தாய் நாட்டிலேயே சிறிய தொழில் ஒன்றைத் தற்போது செய்து வருகிறார். இந்த இராகுலைப் போன்ற பல எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். இந்த இராகுல்களுக்குத் தஞ்சம் கொடுக்கும் மனிதாபிமான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
“இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கையில் இருக்கின்றது, எனவே பிறருக்காக வாழுங்கள்” என்றார் கறுப்பினக் காந்தி நெல்சன் மண்டேலா. இன்று உதவிக்காக, பலரின் மனிதாபிமானத்தை எதிர்நோக்கி பலர் காத்திருக்கின்றனர். அதேசமயம் தங்களிடம் இருக்கின்ற மனிதத்தைச் செயல்களால் வெளிப்படுத்தும் நல்ல உள்ளங்களும் உலகில் இல்லாமல் இல்லை. பிரிட்டனில் இலங்கைத் தமிழர் ஒருவர் இரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். 64வயது நிரம்பிய வி. எஸ். வாசன் என்பவர், கடந்த மாதம் 10 ஆம் தேதி இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரயிலில் ஒரு பெண் பிரசவ வலியால் அழுததைப் பார்த்து அவரோடு பயணம் செய்த ஐந்து இளம் வயது வெள்ளையர் நையாண்டியாகச் சிரித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் அங்கிருந்த மற்ற பயணிகள் என்ன நடக்கின்றது என வேடிக்கை பார்த்தார்களே ஒழிய அப்பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை. அப்பெண் வலி மிகுதியால் துடிக்கவே, அங்கிருந்த பெண்களிடம் உதவி கேட்டார். இரு பெண்கள் மட்டும் முன்வந்தனர். அவர்கள் துணையுடன் வாசனே பிரசவம் பார்த்து தாயையும் குழந்தையையும் பத்திரமாக காப்பாற்றியிருக்கிறார். இரயிலையும் நிறுத்தி அவசர மருத்துவ வாகனம் வரச் செய்து அதில் தாயையும் சேயையும் மிகவும் பத்திரமாக ஏற்றி விட்டிருக்கிறார் மனிதாபிமானி வாசன்.
பணமும் வசதிகளும் பெருகப் பெருக, மனிதரில் தன்னலமும் வளர்ந்து வருகின்றது. எனவே ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்ற பன்னாட்டு அமைப்புகளும் அரசு சாரா அமைப்புகளும் மனிதாபிமான உணர்வுகளுக்காக, மனிதாபிமான உதவிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. அன்பர்களே, இன்று ஏன் மனிதாபிமானம் பற்றிப் பேசுகிறோம் என நினைக்கிறீர்களா?. ஆகஸ்ட் 19, வருகிற வெள்ளிக்கிழமை அனைத்துலக மனிதாபிமான நாள். இந்நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலர் பான் கி மூன், இந்த மனிதாபிமானப் பணியைச் செய்யும் எல்லாரையும் இந்நாளில் பெருமைப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். தங்கள் குடும்பம், உடல்நலம், நேரம், கவுரவம் எனப் பாராது போர், பஞ்சம் மற்றும் இயற்கைப் பேரிடர் இடம் பெறும் இடங்களிலும், பிற இடங்களிலும் பலர் மனிதாபிமானச் சேவைகளைச் செய்து பலருக்கு வாழ்வு கொடுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் இந்நாளில் நினைப்போம், அதேசமயம் இந்தப்பூமி அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைய நாம் ஒவ்வொருவரும் பயணத்தைத் தொடங்க இந்த மனிதாபிமானிகள் நம்மைத் தூண்டுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஓர் ஆண்டும் மனிதாபிமானம் சார்ந்த பிரச்சனை இல்லாமல் ஒருபோதும் முடியவில்லை. தேவையில் இருப்போர் இருந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வோரும், அம்மக்களின் துன்பங்களை அகற்றி நம்பிக்கை அளித்துக் கொண்டே இருக்கின்றனர். ஜப்பான் முதல் சூடான் வரை, பாகிஸ்தான் முதல் ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் வரை வீடுகளையும் உறவுகளையும், வருவாய்க்கான வளங்களையும் இழந்தோருக்கு உதவும் நிவாரணப் பணியாளர்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான், ஹெய்ட்டி போன்ற நாடுகளில் சில மனிதாபிமானப் பணியாளர்கள் இறந்திருக்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் உலகில் 780 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2010ல் மட்டும் 87 பேர் கொல்லப்பட்டனர். அவர்களையெல்லாம் இந்நாளில் நினைப்போம் என்று பான் கி மூன் தனது செய்தியில் கூறியுள்ளார்.
அன்பர்களே, தேவையில் இருக்கும் எத்தனையோ பேரைத் தினமும் சந்திக்கிறோம். தேவை என்றவுடன் பொருள் உதவி என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. ஆறுதலும் தேறுதலுமான வார்த்தைகள், நல்ல ஆலோசனைகள், செபங்கள் என இப்படி பல தேவைகள் இருக்கின்றன. இவர்களுக்கு நமது மனிதப்பண்பு செய்வது என்ன?
ஒரு நாள் முல்லா குளக்கரையில் மீன்பிடிப்பவர்களை வேடிக்கை பார்த்தபடி நின்றார். ஒரு கட்டத்தில் பின்னால் ஒருவர் நெருக்கியதால் குளத்தில் விழப்போனார். அவர் குளத்தில் விழுந்திருப்பார். ஆனால் பக்கத்தில் நின்றவர் சட்டென முல்லாவைத் தாங்கி அவரை விழாமல் பிடித்துக் கொண்டார். உடனே நன்றி சொன்னார் முல்லா. இந்தச் செய்தியை ஊர் முழுவதும் பரப்பினார் காப்பாற்றினவர். என்ன முல்லா, கொஞ்சம் கவனமாக இருந்திருக்கக் கூடாதா என ஊரார் கேட்கத் தொடங்கினர். ஒருநாள் முல்லா தன்னைத் தாங்கிப் பிடித்தவரை வழியில் பார்த்தார். உடனை அவரைக் குளக்கரைக்கு அழைத்துச் சென்று அவர் முன்னாலே குளத்தில் விழுந்தார் முல்லா. கூடவந்தவர் பதறினார். கழுத்தளவு நீரில் மூழ்கி எழுந்து நின்றார் முல்லா. பின்னர் முல்லா அவரிடம், அன்று நீங்கள் என்னைக் கைத்தாங்கலாகப் பிடிக்காமல் இருந்திருந்தால் இந்த அளவுதான் நனைந்திருப்பேன். இனிமேலாவது நீங்கள் என்னைக் காப்பாற்றியதை எவரிடமும் பெருமையாகச் சொல்லித் திரிய வேண்டாம் என்றார்.
இயேசுவும் சொன்னார் – உன் வலக்கை செய்யும் உதவியை இடக்கை அறியாதிருக்கட்டும் என்று.








All the contents on this site are copyrighted ©.