2011-08-15 14:05:18

இறைவனின் கொடைகளை சுதந்திரமாகப் பெறும் வகையில் விசுவாசத்தில் வளர அழைக்கிறார் திருத்தந்தை


ஆக.15, 2011. விசுவாசத்தில் வளர்ந்து, இறைவனின் கொடைகளைச் சுதந்திரமாகப் பெறும் வகையில் நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அனைத்து விசுவாசிகளும் அழைப்புப் பெறுகிறார்கள் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் மகளுக்கு குணம் தரும்படி இறைவனை வேண்டிய கானானியப் பெண் குறித்த இஞ்ஞாயிறு வாசகத்தின் அடிப்படையில் ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் தனித்தன்மையையும், அவரின் வார்த்தைகளையும் , இறைவனின் கொடைகளையும் அறிந்து ஏற்றுக்கொள்ள நம் விசுவாசம் உதவுகிறது என்றார்.
மனமாற்றம் எனும் அனுபவத்தை ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கான தேவை நம் இதயங்களுக்கு உள்ளது எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
இறைவார்த்தைகளுக்கு செவிமடுத்தல், திருவருட்சாதன நிறைவேற்றல், தனி செபங்கள் மற்றும் நம் அயலாருக்கான பிறரன்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் நம் விசுவாசம் ஊட்டம் பெறட்டும் என்ற பாப்பிறை, உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும் தனக்கு செபங்கள் மூலம் உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்தச் செவ்வாய் முதல் ஞாயிறு வரை இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெறும் 6 நாள் கொண்டாட்டங்களின் இறுதி 4 நாட்களும் இளைஞர்களுடன் இருப்பார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.