2011-08-15 14:02:47

ஆகஸ்ட் 15 வாழ்ந்தவர் வழியில்.....


1872ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த ஸ்ரீ அரவிந்தர், விடுதலைப் போராட்ட வீரராய் இருந்து, பின் ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டவர் எனக் கருதப்படுகிறது. 1879 ல் கல்வி கற்பதற்காக இவர் தனது சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார். கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார். தாமரையும் குத்து வாளும் என்ற இரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். 1893,பெப்ரவரியில் இந்தியா திரும்பினார். அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து அவரது தந்தை இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார். பரோடவில் பணிபுரியும் காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டுணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன. 1907 லும் 1908 லும் இருமுறை சிறை சென்றார். ஸ்ரீ அரவிந்தர், விடுதலை என்பதை அரசியற் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பொருள் கொண்டார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலைநாட்டுவதற்கு விடுதலை முதற்படி என்று கருதியவர். 1909ல் சிறையிலிருந்து விடுதலை பெற்றதையடு்த்து அரசியல் இயக்கங்களைத் தவிர்த்துக் கொண்டு யோக நெறியில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 1910ல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதிலிருந்து தப்பிக்க மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்தார். இதனால் ஆங்கிலேய அரசிற்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முழுவதுமாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் யோகநெறியில் தன்னைப் பக்குவப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். பாரதியாரோடு நட்புக் கொண்டார். சாவித்திரி காவியத்தைப் படைத்தார்.
யோகத்தின் குறிக்கோள் உள்ளார்ந்த தன்வளர்ச்சியாகும். தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் இம்மண்ணுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பே மாறி தெய்வீகநிலை தோன்றும் என்றும் வற்புறுத்தினார். அரவிந்தர் சனாதன தர்மத்தினை ஆழமாக நோக்கியவர். வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை முன்வைத்தார். ஸ்ரீ அரவிந்தர் 1950, டிசம்பர் 5ம் தேதி இறைபதம் அடைந்தார்.








All the contents on this site are copyrighted ©.