2011-08-15 14:05:31

அன்னை மரியைக் குறித்து ஆழ்ந்து தியானிப்பது, நம் வாழ்வையே ஆழமாகச் சென்றுப் பார்க்க உதவுகிறது - திருத்தந்தை


ஆக 15, 2011. அன்னை மரியைக் குறித்து ஆழ்ந்து தியானிப்பது, நம் வாழ்வையே ஆழமாகச் சென்றுப் பார்ப்பதற்கு உதவுகிறது என இத்திங்களன்று அன்னைமரியின் விண்ணேற்புவிழாத் திருப்பலியின்போது வழங்கிய மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
நம் வாழ்வின் பிரச்சனைகளும் நம்பிக்கைகளும், அன்னைமரியின் ஒளியையும், ஆன்மீகப் பாதையையும், மகிமைக்கான இறுதி நோக்கத்தையும் பெறுவதோடு, அவரின் பாதையும் நோக்கமும் நம்முடையதாக மாறவும் உதவுகிறது என்றார்.
மக்களிடையே இறைவனின் பிரசன்னத்திற்கு அடையாளமாக இருக்கும் பழைய ஏற்பாட்டின் 'உடன்படிக்கை பெட்டகம்' குறித்தும் காஸ்தல் கந்தோல்ஃபோ தூய வில்லனோவா தாமஸ் பங்குத்தளத்தில் நிறைவேற்றிய திருப்பலியின்போது உரைத்த பாப்பிறை, இயேசுவைக் கருவில் தாங்கிய அன்னைமரியே அந்த உடன்படிக்கைப் பெட்டகம் எனவும் எடுத்துரைத்தார்.
வாழும் உடன்படிக்கைப் பெட்டகமான அன்னை மரியாள், இறைமகனுடன் மிக நெருங்கிய விதத்தில் ஒன்றித்திருந்தார் என்ற பாப்பிறை, திருவெளிப்பாட்டு நூலில் அனனைமரி குறித்து எடுத்துரைத்திருப்பவைகளையும் மேற்கோள் காட்டினார்.
இயேசு தன் வயிற்றில் மகனாகப் பிறக்க உள்ள செய்தி அறிந்தவுடன் அன்னை மரி, முதிர்ந்த வயதில் கருத்தாங்கியிருந்த எலிசபெத்தைப் பார்க்கச் சென்றதையும், அன்னைமரி எனும் உடன்படிக்கைப் பெட்டகத்தைப் பார்த்ததும் எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளியதையும் இம்மறையுரையில் குறிப்பிட்ட பாப்பிறை, அந்த அன்னை மரியே நமக்கு நம்பிக்கையையும், வருங்கால மகிழ்வையும் தருவதோடு, அவைகளைப் பெறுவதற்கான வழிகளையும் கற்றுத்தருகிறார் என்றார்.







All the contents on this site are copyrighted ©.