2011-08-13 13:58:01

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படை விழுமியங்களை வழங்கவேண்டும் - பேராயர் ஃபிசிக்கெல்லா


ஆக.13,2011. மாணவர்களின் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படை விழுமியங்களை பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டும் என்று திருப்பீட புதிய நற்செய்திப்பணி அவையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா கேட்டுக் கொண்டார்.
இஸ்பெயினின் அவிலா நகரில் நடைபெற்று வரும் உலகக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் மாநாட்டில் இச்சனிக்கிழமை உரையாற்றிய பேராயர் ஃபிசிக்கெல்லா, ஒரு பக்குவமடைந்த மனிதனாக உருவாக வேண்டியதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணரச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
திருச்சபை, ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் போது அது வெறுமனே மாணவ மாணவியரின் திறமைகளை வளர்ப்பதற்கும் அறிவின் மீதான தாகத்தையும் ருசியையும் ஏற்படுத்துவதற்குமான நோக்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, மாறாக, அவர்களின் ஆன்மீக நலனில் மிகுந்த அக்கறை காட்டும் நோக்கத்துடன் அதனை உருவாக்குகின்றது என்று 1852ல் ஜான் ஹென்ரி நியுமென் கூறியதையும் பேராயர் சுட்டிக் காட்டினார்.
பல்கலைக்கழக மாணவ மாணவியர், சமுதாயத்தில் பல்வேறு அங்கங்களை வகிக்கும் போது அவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றார் பேராயர் ஃபிசிக்கெல்லா.
இவ்வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த அவிலா மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.