2011-08-13 15:15:24

ஆகஸ்ட் 14, வாழ்ந்தவர் வழியில்...


உலகில் பிரம்மாண்டமான வடிவில் அமைந்துள்ள கோவில்களில் ஒன்று ஜெர்மனியில் Cologne நகரில் உள்ள பேராலயம். 1248ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இப்பேராலயத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் இக்கோவிலின் கட்டுமானம் தடைப்பட்டு, 1880ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை இது திருப்பயணிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் மிகவும் கவர்ந்து வரும் ஒரு தலமாக உள்ளது. “மனிதர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஓர் அற்புத கலை வடிவம் இது” என்று UNESCO நிறுவனம் இக்கோவிலைப் புகழ்ந்துள்ளது. குறைந்தது 20,000 பயணிகள் ஒவ்வொரு நாளும் இப்பேராலயத்தைக் காண வருகின்றனர்.
இரட்டைக் கோபுரங்களைக் கொண்ட இப்பேராலயத்தின் ஒவ்வொரு கோபுரமும் 480 அடி உயரம் கொண்டது. 1880 முதல் 1884 வரை இதுவே உலகின் மிக உயரமான கோபுரமாக இருந்தது.
கோவில் கோபுரங்கள் விண்ணைத் தொடுவது போல் உயரமாகக் கட்டப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கோபுரங்களின் உயரத்தைக் காண, நம் கண்கள் உயரும்போது, நமது மனங்களும் உயர்ந்து, விண்ணையும், விண்ணில் வாழும் இறைவனையும் எண்ணிப்பார்க்க ஒரு வாய்ப்பை நமக்குத் தருகின்றன இக்கோபுரங்கள்.








All the contents on this site are copyrighted ©.