2011-08-12 15:13:42

தென்னாப்ரிக்க மாணவர் அமைப்பு இஸ்ரேல் இனவெறிக்கு எதிர்ப்பு


ஆக.12,2011. இஸ்ரேல் அரசு, அந்நாட்டின் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பே மேலும் குடியிருப்புக்களை அமைப்பதற்கு அனுமதியளித்திருப்பதையடுத்து இஸ்ரேல் பொருட்களையும் அந்நாட்டின் சேவைகளையும் புறக்கணிப்பதற்கு முடிவு செய்துள்ளது தென்னாப்ரிக்க மாணவர் அமைப்பு.
உலகில் இஸ்ரேல் பற்றிப் பதிந்துள்ள மோசமான பிம்பத்தை அகற்றும் நோக்கத்தில் 150 இஸ்ரேல் பிரச்சாரதாரிகள், ஐந்து கண்டங்களுக்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்
இதனையொட்டி தென்னாப்ரிக்கப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நிறவெறிப் பாகுபாட்டுத் தழும்புகளை ஏற்றுள்ள தாங்கள், உலக அளவில் நசுக்கப்படும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டும் பொறுப்பைக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இஸ்ரேலில் காட்டப்படும் இனவெறியும், ஒடுக்கப்படுவதின் ஒரு வடிவமே எனவும் தாங்கள் முழுவிடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வருவதாகவும் தென்னாப்ரிக்கப் மாணவர் அமைப்பு கூறியுள்ளது.
இஸ்ரேல் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் ஆக்ரமிக்கப்பட்ட கிழக்கு எருசலேமில் மேலும் 1,600 குடியிருப்புக்களை அமைப்பதற்கு அனுமதியளித்துள்ளது. இன்னும் 2,700 குடியிருப்புக்களை அமைக்கவும் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.