2011-08-11 15:23:32

கல்வி நிறுவனங்கள் உலகில் உணவின்றி வாடும் பல்லாயிரம் மக்களின் துயர் துடைப்பதற்கு வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்


ஆக.11,2011. கல்வியறிவு பெற்றவர்களும், கல்வி நிறுவனங்களும் உலகில் நிலவும் பசிக் கொடுமையைத் தீர்க்கவும், உணவின்றி வாடும் பல்லாயிரம் மக்களின் துயர் துடைப்பதற்கும் வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
தென் கொரியத் தலைநகரான Seoulல் உயர்கல்வி நிறுவனங்களுக்கென ஐ.நா. அவை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலர் இவ்வாறு கூறினார்.
ஆப்ரிக்காவில் நிலவும் பசிக் கொடுமையில் ஒரு கோடியே பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் துன்புறுவதைச் சுட்டிக் காட்டிப் பேசிய பான் கி மூன், சுற்றுச் சூழல் மாற்றங்கள் மற்றும் சமதாயத்தில் உருவாகும் பிளவுகள், வன்முறைகள் அனைத்தும் ஆப்ரிக்காவில் நிலவும் பட்டினிக்குக் காரணம் என்பதை சுட்டிக் காட்டினார்.
மனிதர்களின் அறிவுத் திறனையும் இன்னும் பிற வளங்களையும் சரிவரப் பயன்படுத்தவும், சுற்றுச்சூழலை சீரழிக்காத முன்னேற்ற வழிகளைக் கண்டுபிடிக்கவும் உயர்கல்வி நிறுவனங்கள் முயன்றால், பசி, பட்டினி ஆகிய உலகப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று பான் கி மூன் மேலும் கூறினார்.
சமுதாய முன்னேற்றத்தில் உயர்கல்வி நிறுவனங்களை ஈடுபடுத்தும் முயற்சிகளை உலகின் 104 நாடுகளில் 670 உயர்கல்வி நிறுவனங்களில் ஐ.நா. மேற்கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.