2011-08-11 15:36:58

ஆகஸ்ட் 12 வாழ்ந்தவர் வழியில்....


வில்லியம் ஷாக்லி (William Bradford Shockley), என்பவர் ஓர் அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர். இவர், John Bardeen, Walter Houser Brattain ஆகிய இருவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்புக்கு இம்மூவரும் 1956ல் நொபெல் இயற்பியல் விருது பெற்றனர். வில்லியம் ஷாக்லி, 1950கள் மற்றும் 1960களில் தனது புதிய டிரான்சிஸ்டரை வியாபாரம் செய்வதற்காக எடுத்த முயற்சியின் பயனாக கலிஃபோர்னியாவின் "Silicon Valley" உருவானது. இங்கிலாந்தின் இலண்டனில் 1910ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்த ஷாக்லி, அவரது குடும்பத்தின் பூர்வீக நகரமான கலிஃபோர்னியாவின் Palo Alto வில் வளர்ந்தார். அமெரிக்கர்கள் ஜப்பானை ஆக்ரமிப்பதன் மூலம் இடம் பெறக்கூடிய உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு 1945, ஜூலையில் இவர் அமெரிக்கப் போர் அலுவலகத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டார். இவரது வியூக அறிக்கையை வைத்தே ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டதாகவும் அதன்மூலம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஷாக்லி தொடர்ந்து பல எலக்ட்ரானிக் கருவிகளைக் கண்டுபிடித்தார். பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவர் 20ம் நூற்றாண்டில் தாக்கத்தை ஏற்படுத்திய மிக முக்கிய நூறு பேரில் ஒருவராக டைம் இதழால் பெயரிடப்பட்டார். வில்லியம் ஷாக்லி, 1989ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி புற்று நோயால் இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.