2011-08-10 15:23:26

பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhatti, குடும்பத்தில் உருவான ஒரு தகராறினால் கொலை செய்யப்பட்டார் - காவல் துறையின் தவறான அறிக்கை


ஆக.10,2011. இவ்வாண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் கொலையுண்ட அமைச்சர் Shahbaz Bhatti, குடும்பத்தில் உருவான ஒரு தகராறினால் கொலை செய்யப்பட்டார் என்று காவல் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையை பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர்.
காவல் துறையின் இந்த அறிக்கை மிகவும் கேவலமானது என்றும், அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள் குற்றவாளிகளைக் காக்கும் ஒரு முயற்சி என்றும் லாகூர் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் லாரன்ஸ் சல்தானா கூறினார்.
சிறுபான்மையினர் துறையின் அமைச்சராகப் பணியாற்றி வந்த Shahbaz Bhatti, சிறுபான்மையினருக்கு எதிராக பாகிஸ்தானில் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தேவநிந்தனை சட்டத்தை நீக்குமாறு போராடி வந்தார்.
மார்ச் 2ம் தேதி இஸ்லாமாபாதில் இவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அல்கெய்தா அமைப்புடன் தொடர்புடைய Tehrik-i-Taliban குழுவினர் இந்தக் கொலைக்கு தாங்களே காரணம் என்று கூறியிருந்தது.
Shahbaz Bhattiயின் கொலை குறித்து வெளியான இந்த அறிக்கையை அனைத்து பாகிஸ்தான் சிறுபான்மையினர் ஒருங்கமைவு என்ற அமைப்பினரும் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 11ம் தேதி தேசிய சிறுபான்மையினர் நாள் என்று Shahbaz Bhatti அறிவித்திருந்ததை நினைவு கூறும் வண்ணமாக, அனைத்து பாகிஸ்தான் சிறுபான்மையினர் ஒருங்கமைவு தங்கள் பாதுகாவலரான Shahbaz Bhattiக்கு இவ்வியாழனன்று மரியாதை செலுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.









All the contents on this site are copyrighted ©.