2011-08-09 16:15:42

ஆகஸ்ட் 10வாழ்ந்தவர் வழியில்...


வரலாற்று சிறப்பு மிக்க அரிதானப் பொருட்களைப் பாதுகாத்து, அவைகளை மக்களின் பார்வைக்கு வைத்து, அதன் மூலம் கல்வி புகட்டும் அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
அருங்காட்சியகங்களிலேயே மிகவும் பிரபலமான ஓர் அருங்காட்சியகம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் உள்ள Louvre அருங்காட்சியகம். பதிவு செய்யப்படாத வரலாற்றுக் காலத்திலிருந்து 19ம் நூற்றாண்டு வரை பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட அரிய பொருட்கள் Louvre அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
உலக வரலாற்றை மக்களுக்கு மீண்டும், மீண்டும் எடுத்துரைக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டிடம் 12ம் நூற்றாண்டில் 2ம் பிலிப் என்ற பிரெஞ்ச் மன்னன் கட்டிய அரண்மனை. 1682வரை பிரெஞ்ச் மன்னர்களின் அரண்மனையாக இருந்தது இந்த மாளிகை. 14ம் லூயி என்ற மன்னன் 1682ல் வேறொரு அரண்மனையை எழுப்பியதால், இந்த மாளிகை அரசப் பரம்பரையின் அரிய கருவூலங்களை மக்கள் பார்வைக்கு வைக்கும் அருங்காட்சியகமாய் மாறியது. உலகெங்கிலுமிருந்து கொண்டு வரப்பட்ட பல வரலாற்று சிறப்பு மிக்கப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டன.
1793ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி 537 ஓவியங்களை மக்கள் பார்வைக்கு வைத்து, இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
உலகின் தலை சிறந்த ஓவியர்கள் பலரின் படைப்புக்கள் Louvre அருங்காட்சியகத்தில் உள்ளன. இந்த ஓவியங்களிலேயே மக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்து வருவது லியோனார்டோ டா வின்சி வரைந்த Mona Lisa என்ற ஓவியமே!








All the contents on this site are copyrighted ©.