2011-08-08 15:54:15

வாரம் ஓர் அலசல் – நம்பிக்கை இருந்தால் துணிச்சல் தானே வரும்


ஆக.08,2011. “பாதி மனிதன் – பாதி விலைக்கடை”. இம்மாதிரியான தலைப்பை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? வத்திக்கான் வானொலி நேயர்களில் ஒருசிலர் சீனா சென்று வந்திருக்கிறீர்கள். அங்கு இக்கடையைப் பார்த்திருக்கலாம். ஆம். Peng Shuilin என்பவர் 78 செ.மீ. உயரமுடைய மனிதர். இவ்வளவுதானா உயரம் என்று கேட்காதீர்கள். இவர் இந்த உயரத்தை தனது 37வது வயதில் பெற நேர்ந்தது. 1995ல், Shenzhenல், வேகமாக வந்த ஒரு லாரி, Peng Shuilin னின் உடலை இரண்டு துண்டாக்கியது. இடுப்புக்குக் கீழே எல்லா உறுப்புக்களும் சிதைந்து போக வேறு வழியின்றி அவற்றை மருத்துவர்கள் அகற்றி விட்டனர். இரண்டு ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது உடலின் ஏறத்தாழ ஒவ்வொரு முக்கிய உறுப்பை அல்லது அது வேலை செய்யும் முறையை அறுவை சிகிச்சை செய்து சரிப்படுத்த வேண்டியிருந்தது. 2 அடி 7 அங்குலம் கொண்ட Peng Shuilin தற்சமயம் பேரங்காடி ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார். உறுப்புக்களை இழந்தவர்கள் வாழ்வு பெறலாம் என்பதை உலகெங்கும் சென்று சக்கரநாற்காலியில் இருந்து கொண்டே சொற்பொழிவுகள் ஆற்றுகிறார். மருத்துவர்கள் இவருக்கென முட்டைவடிவில் பெட்டி போன்று ஒரு கருவியை இவரது உடம்பில் பொருத்தி அத்துடன் இரும்புக் கால்கள் அமைத்துக் கொடுத்தனர். அதன் துணையுடன் நடக்கவும் செய்கிறார் Peng Shuilin. பத்து ஆண்டுகள் கழித்து இவரைப் பரிசோதித்த மருத்துவமனை உதவித் தலைவர் லின் லியூ, இவரது வயதிலுள்ள மற்ற ஆண்களைவிட இவர் நன்றாக இருக்கிறார் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார். சீனாவின் ஹூனன் மாநிலத்தில் பிறந்த Peng Shuilin னின் பல புகைப்படங்களை இணையத்தில் பார்த்த போது ஆ...! இப்படியும் ஒரு மனிதரா? என்று வியந்தோம்.
Peng Shuilin விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற போதும் அதற்குப் பின்னும் எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் இருக்கிறாராம். உடலில் பாதியை இழந்தும் இவருக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்!. நொபெல் விருது பெற்ற சர்.சி.வி.இராமன் தனது 82 வது வயதில், வெல்லமுடியாத சக்தி பற்றி உரை நிகழ்த்தினாராம். “என் முன்னே உள்ள இளைஞர்களே! பெண்களே...நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம்... எப்போதும் நம்பிக்கையையும் துணிவையும் இழந்துவிடாதீர்கள் என்பதே” என்று சொன்னாராம். வாழ்க்கையில் நம்பிக்கையும் துணிச்சலும் ஒரு தராசின் இரண்டு தட்டுகள். இவையிரண்டையும் கொண்டிருப்பவர்கள் பல சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜூலை மாதத்தில் மட்டும் எத்தனை சாதனைத் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின.
இந்தியாவின் புனே நகரத்தைச் சேர்ந்த சுசிதா என்ற 33 வயதுப் பெண் ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலைவனமான கோபி பாலைவனத்தைக் கடந்துள்ளார். இவ்வாறு சாதித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். மங்கோலியாவின் தெற்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனம், ஆசியாவிலேயே மிகப் பெரிய பாலைவனம். உலகில் உள்ள மிகப்பெரிய பாலைவனங்களில் ஐந்தாவது இடத்திலும் இது உள்ளது. 13 பேர் கொண்ட குழுவினருடன், தன் பயணத்தைத் துவங்கிய சுசிதா, ஆயிரத்து 623 கி.மீ., பயணம் செய்து கோபி பாலைவனத்தைக் கடந்துள்ளார். சர்வதேச அளவில், இந்த பாலைவனத்தை கடந்த மூன்றாவது பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். சுசிதா சொல்கிறார்.....
கோபி பாலைவனம், இரவில் அதிகபட்ச குளிரையும், பகலில் அதிகபட்ச வெயிலையும் கொண்டிருக்கிறது. இதைக் கடப்பது என்பது மிகவும் சவாலாகத்தான் இருந்தது. அதைச் செய்து காட்டியதன் மூலம், மற்ற எந்த வேலையையும் எளிதாகச் செய்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அங்கு ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கும் போது, காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தன. ஒரு நாளைக்கு 25 முதல் 32 கி.மீ., வரை நடந்திருக்கிறேன். சில நாட்களில் உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. அதையெல்லாம் தாண்டி, இந்த சாதனையை நிகழ்த்தியதில் பெருமையாக இருக்கிறது.
தமிழகத்தின் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை கோகோ லேண்ட் நீச்சல் குளத்தில் நீருக்கடியில் சதுரங்கம் விளையாடி, கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில், 10 சதுரங்க வீரர்கள் 5 ஜோடியாக பிரிந்து, 12 அடி ஆழ நீச்சல் குளத்தில் பிரத்யேக நீச்சல் உபகரணங்கள் அணிந்து, நீருக்குள் மூழ்கியபடி விளையாடினர். நீரின் அழுத்தம், சுவாசப் பிரச்சனை உட்பட, பல்வேறு தடைகளைக் கடந்து, 25 நிமிடங்களில் வெற்றிகரமாக விளையாடி முடித்தனர். இதில் ஐயப்பன், லியோ ஆனந்த், விக்னேஷ், ஜெகன்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வாழ்ந்து வரும் ராகுல் பிரகாஷ் சுவர்ணா என்ற 26 வயது இளைஞர், சேவை மனப்பான்மையுடன் சில துணிச்சலான செயல்களை செய்து வருகிறார். மும்பையில் குடிசைப் பகுதிகளில் போதிய ஆசிரியர் இல்லாமல், மூடப்படும் நிலையில் இருந்த மூன்று மாநகராட்சிப் பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளார். "அக்னாஷா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்தப் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களை நியமித்து ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 650 குழந்தைகள் படிப்பதற்கு வழி செய்துள்ளார். தனது அண்ணன் திருமணம் வரதட்சணை இல்லாமல் நடப்பதற்கு பல எதிர்ப்புக்களைத் துணிச்சலுடன் சந்தித்து சாதித்துள்ளார். தனது பெயருக்குப்பின், தாயாரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதற்கு அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். இறுதியில், தனது பெயருடன், தனது தாயாரின் பெயரை இணைத்துக் கொண்டார். இதனால் பஞ்சாயத்தில், இவரை ஊரை விட்டே விலக்கி வைத்தனர். ஆனாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை. திருமண நிகழ்ச்சிகளின் போது மணமக்களின் மீது, அரிசி தூவுவதையும் தடுக்க வேண்டும் என ராகுல் நினைத்தார். "நம் நாட்டில் இலட்சக்கணக்கான குழந்தைகள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஒருவேளை உணவுகூட இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஆடம்பரத்துக்காக மணமக்கள் மீது அரிசியைத் தூவி, அதை வீணடிப்பதேன்' எனக் கேள்வி எழுப்பினார். வழக்கம்போல, இதற்கும் சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், ஒவ்வோர் ஊராகச் சென்று, இது குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகிறார். இதுவரை 35 ஆயிரம் டன் அரிசியை, வீணடிக்காமல் சேமிக்க வைத்துள்ளேன் என்கிறார் ராகுல்.
தமிழகத்தில் அண்மையில் நடந்த தேர்தல் சமயத்தில் மதுரையில் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி இல்லக் காப்பாளர் ஜான், "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல. ஓட்டளிக்கப் பணம் தர முன்வரும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை!' என வீட்டின் முன் எழுதித் தொங்க விட்டார். இதற்கெல்லாம் ஓர் அசாதரணத் துணிச்சல் தேவையல்லவா!.
இளைஞர்களுக்கானத் தகுதி வலுவான உடல் அமைப்பு மட்டும் என்று தவறாக எண்ணுகிறோம். திடமான மனம் கொண்டவனே உண்மையில் இளமை உடையவன். எதிர்பாராததையும் எதிர்கொள்ளும் துணிச்சல் நமக்கு வேண்டும் என்று பெரியோர் சொல்கின்றனர். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலும் உருவாக முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை மாணவர் சமுதாயத்தில் விதைத்து வருபவர் டாக்டர் அப்துல் கலாம். இவர் ஒரு சமயம் மாணவரிடம், “வெல்ல முடியாதது என்று கருதப்படுவதை வெல்லக்கூடியது அறிவுதான். இந்த அறிவு, கற்பனைத் திறன், நேர்மை, துணிவு, வெல்ல முடியாத சக்தி ஆகிய அம்சங்களைக் கொண்டது என்கிறார். அத்துடன், வித்தியாசமாகச் சிந்திக்கும் துணிவு, கண்டுபிடிக்கும் துணிவு, இதுவரை யாரும் செல்லாத பாதையில் செல்லும் துணிவு, முடியாதது எது என்பதை அறியும் துணிவு, சிக்கல்களை தீர்க்கும் துணிவு ஆகியவை இளைஞர்களின் உயிர்மூச்சாக இருக்க வேண்டும்” என்றார். “உங்கள் முன் உள்ள சவாலைத் துணிச்சலான ஈடுபாட்டின் மூலமாகத்தான் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதிபடச் சொல்ல முடியும். இந்தியர்களின் சிந்தனை வட ஐரோப்பியர்களுக்குக் கொஞ்சமும் குறைந்தது அல்ல. நம்மிடம் இல்லாதது துணிச்சல் மட்டும்தான்” என்று சர்.சி.வி.இராமன் சொன்னதையும் மாணவர்களிடம் நினைவுபடுத்தினார் அப்துல் கலாம்.
சுவாமி விவேகானந்தர் சொன்னார் - 'கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார்! அதில் துணிச்சல் தென்படும். அதைப் புரிந்து கொண்டால், துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும்!’ என்று. தூய்மையான ஆடைகளை அணிவது, வேகமாக நடப்பது, தன்னம்பிக்கையூட்டுகிற பேச்சுக்களைக் கேட்பது, தன்னம்பிக்கை தரும் எழுத்துக்களைப் படிப்பது, நமது திறமைகளையும் அதனால் கிடைத்த வெற்றிகளையும் அடிக்கடி நினைவுகூறுவது, முன்வரிசையில் அமருவது, அச்சமின்றிக் குழு உரையாடல்களில் கலந்து கொள்வது, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது, பிறரிடம் பரிவுடன் நடந்துகொள்வது ஆகியவை தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்கின்றனர் அறிஞர்கள்.
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் பாரீஸில் இருந்தபோது, குதிரை வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது வண்டியோட்டி, ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று, சாலையோரம் நின்றிருந்த இரண்டு குழந்தைகளிடம் மிகவும் வாஞ்சையாகப் பேசினார்; தலை வருடி முத்தமிட்டார். அந்தக் குழந்தைகள் பார்ப்பதற்குப் பணக்கார வீட்டுப் பிள்ளைகளைப் போல இருந்தனர். அவர்கள் யாரென்று வண்டியோட்டியிடம் விசாரித்தார் விவேகானந்தர். அதற்கு வண்டியோட்டி சொன்னார் - 'ஐயா! நான், இந்த ஊரில் இருக்கும் பெரிய வங்கி ஒன்றுக்குச் சொந்தக்காரன். இப்போது சில சிக்கல்களால் வங்கி செயல்படவில்லை. பெருமளவு தொகை வசூலாகாமல் இருக்கிறது. நிலைமை சரியாகும் வரை நான் சும்மா இருக்க விரும்பவில்லை. கொஞ்சம் பணத்தைப் புரட்டி, இந்தக் குதிரை வண்டியை வாங்கி, ஓட்டிச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். நிலைமை நிச்சயம் சீரடையும்; நான் மறுபடியும் எனது பழைய நிலைக்குத் திரும்புவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது!'' என்று.
அன்பு நேயர்களே, துணிச்சலுக்கும் தன்னம்பிக்கைக்கும் இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவையா?
இந்தக் கீதை வார்த்தைகளை ஆழமாக அசை போடுவோம்.
''நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்!
மேலும், நேயர்களே, நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால்,
பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்;
துணிச்சலுடையவன் என்று நினைத்தால்
துணிச்சல் படைத்தவனாகவே ஆகிவிடுவாய்!''
தன்னம்பிக்கை, துணிச்சல் என்ற இரண்டு படிகளைக் கொண்டு வாழ்வில் ஏறுங்கள் அன்பர்களே. வெற்றி நிச்சயம். நிச்சயம் நிச்சயம், உறுதி, உறுதி, உறுதி







All the contents on this site are copyrighted ©.