2011-08-04 14:50:11

ஆகஸ்ட் 05 வாழ்ந்தவர் வழியில்....


“நூறு பேருக்கு உன்னால் உணவளிக்க முடியவில்லையெனில் ஒருவருக்கு மட்டும் உணவு கொடு. நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டில் வாழ்பவர் பற்றிக் கரிசனையாய் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உங்களது பக்கத்து வீட்டார் யார் என்று தெரியுமா?” இவ்வாறு சொன்னவர் அருளாளர் அன்னை தெரேசா. இன்று உலகில் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் ஒவ்வொரு நாளும் பசியினால் அல்லது பசி தொடர்புடைய நோயினால் இறக்கின்றனர். அதாவது ஒவ்வொரு மூன்றரை வினாடிகளுக்கும் ஒருவர் வீதம் இறக்கின்றார். இவ்வாறு உலகில் வறுமையினால் வாடுபவர்களுக்குச் சேவை செய்து வரும் பன்னாட்டு அமைப்புக்களில் ஒன்று வறுமைக்கு எதிரான அமைப்பு அல்லது ஆக்சன் பாம் (Action Faim) என்ற சர்வதேச இலாப நோக்கமற்ற அரசு சாராத அமைப்பாகும். இது உலக அளவில் வறுமைக் கெதிராகப் போராடி வருகின்ற அமைப்பாகும். இவ்வமைப்பானது 1979ஆம் ஆண்டு பிரான்ஸில் பிரஞ்சு மருத்துவர்கள், அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1985 லும் இஸ்பெயினில் 1994 லும் பிரிட்டனில் 1995லும் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வமைப்பானது இன்று நாற்பது நாடுகளில் தனது திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டங்களால் ஆண்டுதோறும் நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைகின்றனர். இலங்கையில் 1996 ஆம் ஆண்டு முதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. போர்க் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகின்றது. இச்சேவையில் ஈடுபட்டவர்களில் திருகோணமலை மூதூர் பகுதியில் அலுவலகத்தில் வைத்து அலுவலகச் சீருடையில் இருந்த 15 தமிழ்ப் பணியாளர்கள் 2006, ஆகஸ்டு 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இரண்டு உடல்கள் அவ்வலுவலகத்திற்கு அருகிலிருந்த வாகனத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. படுகொலை செய்யப்பட்ட இப்பணியாளர்கள் அந்த ப்ரெஞ்ச் அமைப்பால் நியமிக்கப்பட்டவர்கள். இந்தப் படுகொலை குறித்த விசாரணைகள் சரியான முறையில் நடைபெறவில்லை என்று சர்வதேச நீதிமன்ற ஆணையாளர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.







All the contents on this site are copyrighted ©.