2011-08-03 16:37:22

சானல் 4வுக்கு இலங்கை அரசின் பதில் வீடியோ


ஆக.03,2011. இலங்கையில் இறுதிகட்டப் போர்க் காலத்தின் போது இடம் பெற்ற குற்றங்களை வெளிக்கொணரும் சானல் 4 தொலைக்காட்சியில் வெளியான விவரணப்படம் பொய்களாலானது என்று பிரசாரம் செய்யும் பாணியில் ஆங்கில மொழியிலான விவரணப் படமொன்று தற்போது இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
‘லைஸ் அக்ரீட் அப்ஒன்’ (Lies Agreed Upon) என்ற தலைப்பில் இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இவ்விவரணப் படம், சானல் 4 இல், இலங்கை அரசும் படையினரும் புரிந்துள்ளதாகக் கூறப்பட்ட பல குற்றச்செயல்களை மறுக்கின்றது. இத்துடன், அதில் வீடியோ காட்சிகள் போலியாக தொகுக்கப்பட்டு, உண்மையானவையாக காட்டப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் இந்த படம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றமை தவறு என்று கூறியுள்ள இந்த விவரணப்படம், கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியா உண்மையில் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்றும் விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்துள்ள ரமேஷின் காலத்திலேயே, காத்தான்குடி, அரந்தலாவ போன்ற இடங்களில் விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீதான படுகொலைகளைப் புரிந்தனர் என்றும் பிரசாரப்படுத்துவதில் இலங்கை அரசு சார்பான இந்த வீடியோ அக்கறை காட்டியுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.