2011-08-03 16:31:07

கத்தோலிக்கத் திருச்சபை, ஒப்புரவு அருட்சாதனத்தின் முத்திரையை ஒருபோதும் மீறாது - வத்திக்கான் அதிகாரி உறுதி


ஆக.03,2011. கத்தோலிக்கத் திருச்சபை, ஒப்புரவு அருட்சாதனத்தின் உடைபடா முத்திரையை ஒருபோதும் மீறாது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் உறுதிபடக் கூறினார்.
மனம் வருந்தும் ஒருவர் ஒப்புரவு அருட்சாதனத்தில் வெளியிடுபவற்றைக் கத்தோலிக்கத் திருச்சபை ஒருபொழுதும் வெளியிடாது என்று அப்போஸ்தலிக்கப் பாவமன்னிப்புத் துறையின் தலைவர் பேராயர் ஜான்பிராங்கோ ஜிரோத்தி கூறினார்.
“அருட்பணியாளர்கள், ஒப்புரவு அருட்சாதனத்தில் தெரிவிக்கப்படும் பாலியல் தவறுகள் குறித்து அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்காவிட்டால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை” வழங்கும் புதிய சட்டத்தைக் கொண்டுவரவிருப்பதாக அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி கடந்த ஜூலை 14ம் தேதி உறுதி கூறினார்.
இது குறித்துப் பேசிய பேராயர் ஜிரோத்தி, அயர்லாந்து அரசு தான் விரும்பும் எந்தச் சட்டங்களையும் நிறைவேற்றட்டும், ஆனால், ஒப்புரவு அருட்சாதனம் குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்குத் திருச்சபை, தனது அருட்பணியாளர்களை ஒருபோதும் அனுமதிக்காது என்பதை அரசு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.