2011-08-03 16:30:03

Knights of Columbus பிறரன்பு நிறுவனத்திற்குத் திருத்தந்தை வாழ்த்து


ஆக.03,2011. சனநாயகச் சமூகங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெரும் அறநெறி விவகாரங்களுக்குத் தெளிவான மற்றும் தைரியமான சான்று பகருவது இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஒரு சமூகத்தின் அடிப்படை அமைப்புக்களான குடும்பம், திருமணம் போன்றவற்றை மட்டுமன்றி மனச்சான்று மற்றும் சமய சுதந்திரத்தின் அடிப்படை மனித உரிமைகளைக் குறைத்து மதிப்பிடும் சட்டங்கள் பெருகி வரும் சூழலில் இத்தகைய சான்று வாழ்வு அவசியமாகின்றது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு டென்வரில் தங்களது 129வது மாநாட்டை இச்செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள Knights of Columbus என்ற பன்னாட்டுக் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவன உறுப்பினர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ விசுவாசத்தைக் காப்பதற்கும், பாப்பிறையின் உலகளாவியத் திருச்சபையின் பணிகளுக்கும், தேவையில் இருப்போருக்கும் இந்நிறுவனம் ஆற்றி வரும் சேவைகளுக்கும் நிதியுதவிகளுக்கும் திருத்தந்தையின் பாராட்டும் நன்றியும் அச்செயதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு இவ்வியாழனன்று நிறைவடையும்.
Knights of Columbus என்ற உலகின் மிகப்பெரிய பன்னாட்டுக் கத்தோலிக்கச் சகோதரத்துவத் தொண்டு நிறுவனம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1882ல், கிறிஸ்டோபர் கொல்பசைக் கௌரவப்படுத்தும் நோக்கத்தில் அவர் பெயரில் தொடங்கப்பட்டது. தற்சமயம் இதில் 18 இலட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கத்தோலிக்க விசுவாசத்தை உண்மையாகவே வாழும் 18க்கும் அதற்கு மேற்பட்ட வயதினரும் மட்டுமே இதில் உறுப்பினராக இருக்க முடியும்.
2010ம் ஆண்டில் மட்டும் 15 கோடியே 40 இலட்சம் டாலரைப் பிறரன்புப் பணிகளுக்கு நேரிடையாகக் கொடுத்துள்ளது. இதன் உறுப்பினர்கள் ஏழு கோடிக்கு அதிகமான மணி நேரங்களைத் தன்னார்வச் சேவைக்கென அர்ப்பணித்துள்ளனர். 4,13,000 pints இரத்த தானமும் செய்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.