2011-08-02 16:25:54

விவிலியத்தேடல் – கடவுள் என் பக்கம் இருக்க... - திருப்பாடல்கள் 56, 57


ஆக.02,2011. “ RealAudioMP3 கடவுளே, எனக்கு இரங்கியருளும். ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர். அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர். என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர். மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போரிடுவோர்....” ( 56:1-2 )
அன்பு நேயர்களே, இம்மாதிரி அதாவது, “கடவுளே, எனக்கு இரங்கியருளும். ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர், அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்” என்று செபம் செய்ததுண்டா? இம்மாதிரியான நெருக்கடி நேரம் உங்களுக்கு வந்ததுண்டா? இலங்கையில், இந்தியாவில், லிபியாவில், சிரியாவில், ஆப்கானிஸ்தானில்... எனப் பல நாடுகளில் இன்று அப்பாவி பொது மக்கள் இப்படிக் கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருக்கலாம். தங்கள் மத நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களும் இவ்வாறு செபித்துக் கொண்டிருக்கலாம். ஏன் நேற்றுக்கூட சவுதியிலிருந்து நமது இலங்கை அன்புள்ளம் ஒருவர் நம்மைத் தொலைபேசியில் அழைத்து இதேபோன்றதொரு கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் வாழும் தனது ஒரே மகனைக் காவல்துறையினர் பொய்யாகக் குற்றம்சாட்டி பிடித்துக் கொண்டு சென்று விட்டதாகவும், இப்படித்தான் அங்கு அடிக்கடி நடப்பதாகவும் கூறினார். நான் கடவுளிடம்தான் மன்றாடுகிறேன். அவர்தானே எனக்கு ஒரே அடைக்கலம். நீங்களும் செபம் செய்யுங்கள். கடவுள் இம்மாதிரியான துன்ப நேரங்களில் எனக்கு அருள் செய்திருக்கிறார் என்று அழுது கொண்டே பேசினார். அன்பர்களே, பழைய ஏற்பாட்டில் தாவீதும் பகைவர்களால் இப்படியொரு துன்ப நிலையை எதிர் கொண்டார். சாமுவேல் முதல் புத்தகம் 21ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்.
மன்னன் சவுல் தாவீது மீது பொறாமை கொண்டு அவரைக் கொல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். தாவீது தப்பியோடிச் செல்லும் வழியில் குரு அகிமெலக்கிடம் சென்றார். அவர், கோலியாத்தின் வாளைத் தாவீதுக்கு கொடுத்து அனுப்பினார். அந்தக் கோலியாத் காத்து நகரைச் சேர்ந்தவன். பெலிஸ்தியரில் வீரம் மிக்கவன். அந்தக் கோலியாத்தைத்தான் தாவீது கூழாங்கல்லால் கொன்றார். தாவீது, குரு அகிமெலக்கிடம் விடை பெற்றுக் கொண்டுச் சென்று கோலியாத்தின் ஊராகிய காத்தின் மன்னன் ஆக்கிசிடம் சென்றார். ஆக்கிசின் ஆட்கள் தாவீதை அடையாளம் கண்டு கொண்டனர். இவன்தான் நமது பெலிஸ்தியப் படைத் தளபதி கோலியாத்தையும், நம் படையினர் பதினாயிரம் பேரையும் கொன்றவன் என்று கூறினர். இதனால் தாவீது மிகவும் பயந்தார். அத்துடன், தன்னிடம் கோலியாத்தின் வாள் இருந்ததால் அவரது பயம் அதிகரித்தது. பகைவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்று அஞ்சிக் கலங்கினார். அச்சமயத்தில்தான் இந்தத் திருப்பாடல் 56ஐப் பாடினார் என்று விவலிய அறிஞர்கள் சொல்கிறார்கள். அதன் முதல் 2 வசனங்களைத் தான் நாம் கேட்டோம். அதாவது....
“கடவுளே, எனக்கு இரங்கியருளும். ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர். அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர். என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர். என் எதிரிகள் எந்நேரமும் என் சொற்களைப் புரட்டுகின்றனர். அவர்கள் திட்டங்கள் எல்லாம் என்னைத் துன்புறுத்தவே. அவர்கள் ஒன்றுகூடிப் பதுங்கி இருக்கின்றனர். என் உயிரைப் போக்குவதற்காக என் காலடிச் சுவடுகளைக் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர்.....”
தாவீது, சவுலுக்குப் பயந்து தப்பியோடிக் குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது இன்னுமொரு பாடலைப் பாடியிருக்கிறார். அதுவே திருப்பாடல் 57. இதிலும் தாவீது .....
“கடவுளே! மனிதரை வெறியோடு விழுங்கும் சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன். அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை. அவர்களின் நா கூர்மையான வாள் போன்றது......”
ஆயினும், தாவீது தனது துன்ப நெருக்கடி நேரங்களில் இறைவன் ஒருவரில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தார். தனது உற்ற நண்பனால் வஞ்சிக்கப்பட்ட போதும் அவர் இறைவனைத்தான் ஒரே ஆதரவாகக் கொண்டார் என்று கடந்த வாரம் திருப்பாடல் 55ல் பார்த்தோம். பகைவர்களால் அச்சுறுத்தப்படும் போதும் இறைவனைத்தான் அவர் ஆழமாக நம்பினார், அவரிடம்தான் உதவி வேண்டினார் என்று திருப்பாடல்கள் 56 மற்றும் 57ல் பார்க்கிறோம். எவ்வாறெனில்
“கடவுளே, எனக்கு இரங்கும். இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன். கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன். கடவுளையே நம்பியிருக்கின்றேன். எதற்கும் அஞ்சேன். அற்ப மனிதர் எனக்கென்ன செய்ய முடியும்?...”
எத்தனை துன்பங்கள், எவ்வளவு இடர்கள் சூழ்ந்து வருத்தினாலும் நான் அஞ்சமாட்டேன், கலங்கமாட்டேன். ஏனெனில் எனக்கு உதவுகிறவர் இறைவன், அந்த இறைவன் என் கண்ணீரையெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறவர். அவர் என்னோடு, எல்லாவேளையிலும் இருக்கிறார் என்பதைத் தாவீது மிக ஆழமாக நம்பினார். அந்த அளவுக்கு அவரது இறைப்பற்று இருந்தது. “சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், ஆண்டவரே, நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” என்று திருப்பாடல் 23ல் ஆசிரியர் செபித்தார். “ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்” என்று திருப்பாடல் 118,6ல் செபிக்கிறோம். புனித பவுல், உரோமையருக்கு எழுதிய கடிதம் 8ம் அதிகாரம், 31ம் வசனத்தில், “கடவுள் நம் சார்பில் இருக்கும் போது நமக்கு எதிராக இருப்பவர் யார்” என்கிறார். திருவாசகத்தில் மாணிக்கவாசகர், “பிணியெல்லாம் வரினும் அஞ்சேன். பிறப்பினோடிறப்பும் அஞ்சேன்... தகைவிலாப் பழியும் அஞ்சேன். சாதலை முன்னம் அஞ்சேன்” என்கிறார்.
பகைவர்கள் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும் போது இவ்வாறு செபிக்க முடியுமா?, தீராத நோய்களால், திடீர் இழப்புக்களால், திடீர் மரணங்களால் பாதிக்கப்படும் போது நான் கடவுளையே நம்பியிருக்கிறேன், அவர் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளார், அவர் என்னைக் காக்கிறார் என்று தாவீது போலச் செபிக்க முடியுமா? அப்படி செபிப்பது எளிதா? என்று அன்பு நெஞ்சங்களே, நீங்கள் கேட்கலாம். ஆனால் கடும் துன்ப சோதனைகளில் நம்பிக்கை இழக்காது மக்கள் செபித்து வருகின்றனர். அந்த நெருக்கடிகளையும் வேதனைகளையும் எதிர்கொள்வதற்குச் சக்தி கொடுப்பவரே அந்த இறைவன்தான். நான் எப்படி அவ்வளவு பெரிய துன்பத்தை, மனவேதனையைக் கடந்து வந்தேன் என்று சிந்தித்துப் பாருங்களேன். அப்போது புரியும் அந்நேரத்தில் இறைவனின் வல்லமை செயல்பட்டதை. ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் யாரோ ஒருவர் செய்த கொலைக்காகக் கிறிஸ்தவர்களின் வீடுகள் தீக்கிரையாகின. கிறிஸ்தவர்கள் இந்துமதத் தீவிரவாதிகளால் அநியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்டு வீடு, நிலபுலம் அனைத்தையும் இழந்தனர். ஆனாலும் அவர்கள் இயேசு மீதான நம்பிக்கையை மட்டும் இன்னும் இழக்கவில்லை. பல மறைசாட்சிகள் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையிலும், மிருகங்களுக்கு உணவாகவும் போடப்பட்டார்கள். ஆனால் இயேசு மீதான நம்பிக்கையை இழக்கவில்லை. இதேபோல் பல எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும். இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய போது, தனது தந்தையிடம், இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள் என்று தனது பகைவர்களுக்காகச் செபித்தார்.
ஒருமுறை நாரதர் கடவுள் தரிசனம் பெறக் கிளம்பினார். வழியில் ஒரு விறகுவெட்டி பட்டுப்போன மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தார். அவர் நாரதரிடம், நெடுந்தொலைவுப் பயணமோ என்று கேட்க, நான் கடவுளைத் தரிசிக்கச் சென்று கொண்டிருக்கிறேன் என்றார் நாரதர். சரி, அப்படியே, எனக்கும் எப்போது தரிசனம் கிடைக்கும் என்று கேட்டு வாரும் என்றார் விறகுவெட்டி. சரி என்று தலையை ஆட்டிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் நாரதர். கொஞ்சத் தூரம் போனவுடன் ஒரு குரு கோவிலில் செபம் செய்து கொண்டிருந்தார். அவரும் நாரதரை நலம் விசாரித்துவிட்டு, எனக்கு எப்போது கடவுள் தரிசனம் கிடைக்கும் என்று கேட்டு வாரும் என்றார். குருவுக்கும் சரி என்று சொல்லி பயணத்தைத் தொடர்ந்தார் நாரதர். பயணத்தை முடித்துக் கடவுள் தரிசனம் பெற்றுத் திரும்பும் போது நாரதர், கடவுளிடம், இது போன்ற தரிசனம் தங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று விறகுவெட்டியும் குருவும் கேட்டு வரச்சொன்னார்கள் என்றார். கடவுள் சொன்னார் – நான் கடவுளைக் கண்டேன். அவர் தையல் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்துக் கொண்டிருக்கிறார் என்று மட்டும் சொல் என்று. நாரதரும் நிறை ஆசீர் பெற்றுத் திரும்பினார். வழியில் குரு அவரைத் தடுத்துக் கேட்டார். கடவுள் சொன்னதைச் சொல்லவும் குருவுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. என்ன நாரதரே நக்கலா. அது எப்படி முடியும், ஊசியாம், ஒட்டகமாம். குரு தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருக்க நாரதர் பயணத்தைத் தொடர்ந்தார். வழியில் அந்த விறகுவெட்டியைப் பார்த்தார். அவரோ ஆலமரத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். நாரதரைப் பார்த்தவுடன் என்ன, கடவுளைக் கண்டீர்களா, தரிசனம் கிடைத்ததா என்று கேட்டார். ஆமாம். கடவுளைக் கண்டேன். அவர் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்துக் கொண்டிருக்கிறார் என்றார். அப்படியா. அவரது அருளே அருள். வல்ல செயலே செயல் என்று கண்களை மூடி மனமுருகினார் விறகுவெட்டி. நாரதர் கேட்டார் - அந்தக் குரு இதனை நம்பவில்லை. நீ எப்படி நம்பினாய் என்று. நாரதரே, நான் நம்புகிறேன். கடவுளால் இது முடியும் என்று நம்புகிறேன். இந்தச் சின்னஞ்சிறிய ஆலவிதையிலிருந்து இவ்வளவு பெரிய ஆலமரத்தை உருவாக்கி வளர்க்கின்ற அந்தக் கடவுளால் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைக்க முடியாதா என்ன, நிச்சயமாக முடியும். அவரால் எல்லாம் முடியும் என்றார். விறகுவெட்டி சொன்னதுதான் தாமதம். உடனே கடவுள் அங்குத் தோன்றி அவனுக்குத் தரிசனம் கொடுத்தார். நிறை ஆசீரும் வழங்கினார்.
ஆம். கடவுளால் முடியாதது எதுவுமேயில்லை. அவர் தம்மை நம்பினவர்களைக் கைவிடவே மாட்டார். இதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் எப்புயலிலும் கலங்க மாட்டார்கள். எத்தீவினைக்கும் எந்தத் பகைவருக்கும் அஞ்ச மாட்டார்கள். நம்மைக் காக்கும் தேவன் நம்மோடு இருக்கிறார். அவர் நம் பேச்சிலும் மூச்சிலும் இருக்கிறார். நாம் போகுமிடமெல்லாம் உடன் வருகிறார். காக்கும் தேவன் நம்மைவிட்டு விலகுவதில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.
“இறைவன் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? அன்பு நெஞ்சங்களே, இந்த வேத வார்த்தைகளை அடிக்கடி, குறிப்பாக துன்ப துயர நேரங்களில் சொல்வோம்.








All the contents on this site are copyrighted ©.