2011-07-30 14:15:11

ஞாயிறு சிந்தனை திருவழிபாட்டு ஆண்டின் 18ம் ஞாயிறு


RealAudioMP3 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? இப்படி நான் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? ஒரு சிலர் அந்த நாள் எனக்கு ஒன்றும் ரொம்ப முக்கியமான நாளில்லை என்பீர்கள். அந்த நாளில் பிறந்தவர்களோ, அது எனக்குப் பிறந்தநாள் என்பீர்கள். இன்னும் ஒரு சிலர், “என்ன... வழக்கம்போல எழுந்திருச்சி, பல்விளக்கி, காப்பி குடிச்சி, வேலைக்குப் போயி...” என்று இழுப்பீர்கள். ஒரு சிலரோ, “நல்ல வேளை, நான் பிறக்கவே இல்லை” என்று தப்பிக்கப் பார்ப்பீர்கள்.
இந்த நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள். நான் அந்த ஆண்டு இயேசுசபை நவதுறவறத்தில் (Novitiate) இரண்டாமாண்டில் இருந்தேன். ஒரு நாள் எனது Novice Master இடம் சென்று, "Father, நானும் புனித இஞ்ஞாசியாரைப் போல ஒரு 10 அல்லது 15 நாட்கள் பணம் ஏதுமில்லாமல் பிச்சை எடுத்து சாப்பிட்டுத் திரும்பி வரலாம்னு ஆசைப்படுறேன். நீங்கள் அனுமதித்தால், நானும் என் நண்பர் ஒருவரும் இந்த 'அனாவிம்' அனுபவத்திற்குப் போகிறோம்." என்றேன். நீண்ட யோசனைக்குப் பிறகு, எங்கள் Novice Master எங்கள் இருவரையும் அனுமதித்தார். 1986ம் ஆண்டு நவம்பர் 30 எங்கள் அனுபவத்தின் 5ம் நாள். 4ம் நாள் இரவு எங்களுக்கு பிச்சை எதுவும் கிடைக்கவில்லை. 5ம் நாள் காலையும் அதேபோல். நாங்கள் அன்று பழனி என்கிற இந்து மதத் திருத்தலத்தில் இருந்தோம். நான் மதியம் 12 மணிக்கு ஒரு மரத்தடியில் அசதியிலும், பசி மயக்கத்திலும் படுத்துவிட்டேன். எனது நண்பர் விவிலியத்தை வாசித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் பிச்சைக்காரர்கள் கூட்டம் கூட்டமாக சட்டியோடு விரைந்து செல்வதை எனது நண்பர் பார்த்துவிட்டு, என்னிடம் சொல்ல, நான் விரக்தியில் திருப்பிப் படுத்துக் கொண்டேன். எனது நண்பரோ விரைந்து ஓடி அவர்களிடம் பேசிவிட்டு, திரும்பி என்னிடம் வந்து, "கோவிலில் கூழு ஊத்துராங்களாம்" என்றார். எனக்கு இறையரசே வந்துவிட்டதைப் போன்ற உணர்வு. மிக வேகமாக எழுந்து, அந்தப் பிச்சைக் காரங்களோட போனா, ஒரு கோயில் முன்னாடி நூத்துக் கணக்குல பிச்சைக்காரர்கள். நாங்களும் போயி வரிசைல நின்னுக்கிட்டோம். பெரிய அண்டாவிலிருந்து கூழை எடுத்து, பிச்சைக்காரர்கள் சட்டியில் ஊத்திக்கிட்டிருந்தாங்க. என் முறை வந்தப்ப, நான் என் சின்னத் தட்டை மெதுவாக எடுத்து நீட்ட, அதுல கொஞ்சமா ஊத்துனாங்க. அதை வாங்கிகிட்டு, நானும் என் நண்பரும் பக்கத்திலேயே ஒரு மரத்தடியில் போயி ஒக்காந்து சாப்பிட ஆரம்பிச்சோம். எல்லாரும் எங்களையே பாக்குறது போல ஒரு பிரமை எனக்கு. ஒரு வாய் கூழை எடுத்து வாயில் வச்சிட்டு பாத்தா... பக்கத்து மரத்தடியில ஒரு தொழுநோயாளியான பிச்சைக்கார அம்மா, அவுங்க மடியில ஒரு நாலு வயது பெண் குழந்தை. அந்த அம்மா என்னையே பாக்குறதுபோல எனக்குப் பட்டதால என் நண்பரிடம் சொன்னேன். அவர் என்னைத் திட்டி, "பேசாம சாப்புடுறா" என்றார். மீண்டும் ஒரு வாய் வைத்தேன். பார்த்தால், அந்த அம்மா என்னையேப் பாக்குறாங்க. பிறகு அந்தக் குழந்தையிடம் என்னமோ சொல்லி, அதன் கையில் ஏதோ கொடுத்தார்கள். அந்தக் குழந்தை அதை எடுத்துகிட்டு வந்து என் கையில் கொடுத்தது. ஒரு சிறிய ஊறுகாய் துண்டு. அந்தத் தொழுநோய் கொண்ட தாயின் அன்பை நினைத்து என் கண்ணில் தாரை, தாரையாகக் கண்ணீர்.
ஒரு மிக எளிய தொழுநோய் கொண்ட அம்மாவால் அருகில் இருப்பவரது தேவை என்ன என்று அறிந்து அவர்கள் கேட்காமலேயே உதவி செய்ய முடிகிறது என்றால், அன்பின், பரிவிரக்கத்தின் முழு வடிவான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு என்னென்ன செய்வார் என்பதில் நமக்குச் சந்தேகம் தேவையில்லை. இன்றைய நற்செய்தியில் மத்தேயு 14:14 இறைவசனத்தில் இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள் மீது பரிவு கொண்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறியுள்ளதைப்போல, பால் கொடுக்க மறவாத தாயைவிட மேலானவராக, நமது தேவைகளைத் தினமும், ஒவ்வொரு நொடியும் கண்டறிந்து உதவி செய்யும் ஆண்டவர் இன்றும் நமது தேவைகள் என்ன என்பதை நாம் கண்டுணரும் முன்பே உணர்ந்து, நமக்கு அளித்திடக் காத்திருக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இதை அழகாகக் கூறியுள்ளார்: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்: கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்: தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்: நல்லுணவை உண்ணுங்கள்: கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்: கேளுங்கள்: அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்: தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். (எசாயா 55 : 1-3)
பரிவிரக்கம் என்னும் உணர்வு அன்பில் ஊற்றெடுத்து, செயலில் முடிய வேண்டும் என்கிறார், இறையியல் வல்லுனர் Leonardo Boff. பரிவிரக்கம் கொண்ட இயேசு உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கியபின், சீடர்களிடம் அம்மக்களுக்கு உணவு கொடுக்கச் சொல்கிறார். அழும் குழந்தை பசியால் அழுகிறதா, அல்லது நோயால் அழுகிறதா என்பது தாய்க்கு மட்டுமே தெரியும். அதுபோல, இயேசு தாய்மை உணர்வோடு உணவு வழங்க உத்தரவிடுகிறார் பாலை நிலத்திலே. எப்படி உணவு அளிப்பது என மலைத்துப் போன சீடர்கள் மலைப்பில் இருந்து மீள்வதற்கு முன் ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் கொண்டு, பெண்கள், சிறு பிள்ளைகள் நீங்கலாக, ஐயாயிரம் பேர் வயிறார உண்ண இறையாக்கச் செயலில் ஈடுபடுகிறார் நமது ஆண்டவர் இயேசு. என்னே நமது ஆண்டவரின் தாய்மை உணர்வு!
இயேசு நினைத்திருந்தால், தொடக்கத்திலேயே சீடர்களின் உதவியின்றியே ஐயாயிரம் பேருக்கு உணவு வழங்கியிருக்கலாம். மாறாக, அங்கு இருந்த ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவு வழங்குவது அவரது பரிவிரக்கச் செயல்பாட்டில் நமது பங்களிப்பை நியாயப்படுத்துவதற்காகத் தான்.
இன்றையச் சூழலில் இறைவனது பரிவிரக்கச் செயல்பாட்டிற்கு நான் என்னை எவ்விதம் கையளிக்கிறேன் என்று நாம் சிந்திப்பது பயனளிக்கும். கடவுளது அன்பும், அருளும் நம்மோடு இருக்கும்போது, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? குடும்பத்தில் வறுமை, வேலையின்மை, நோய் என்று பல இடர்பாடுகளில் நாம் உழன்றாலும், தாயினும் மேலாக நம்மை அன்பு செய்யும் ஆண்டவர் நம்மோடு இருக்கும்போது, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நம்பிக்கையின்மை, விரக்தி, வேதனை, மன உளைச்சல், குடிப் பழக்கம் என்று பல்வேறு மன அழுத்த நோய்களால் நாம் தடுமாறினாலும், நம்பிக்கையோடு இன்று நமது ஆண்டவர் இயேசுவை நெருங்கி வருவோம். அவர் நம்மை அன்போடு அரவணைத்துக் கொள்வார். நமக்கு முழு விடுதலை தருவார். பாசத்தின், பரிவிரக்கத்தின் ஆண்டவர் நம்மோடு இருக்கும்போது, நாம் ஏன் பயப்பட வேண்டும்?







All the contents on this site are copyrighted ©.