2011-07-30 14:08:34

இலங்கையில் சுமார் 5000 காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் அவசியம் - ஐக்கிய நாடுகள் நிறுவனம்


ஜூலை 30,2011. இலங்கையில், காணாமல்போய் 17 மாதங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட முக்கிய மனித உரிமை ஆர்வலரின் மரணம் தொடர்பில் புலன்விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பட்டானி ராசிக் (Pattani Razeek) என்ற புத்தளத்தைத் தளமாகக்கொண்ட இந்த மனித உரிமை ஆர்வலர், கடந்த 2010 ஆம் ஆண்டு பொலநறுவையில் வைத்து காணாமல் போனார்.
இந்நிலையில் அவர் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள வீடு ஒன்றின் புதைக்குழியில் இருந்து இவ்வாரத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ரவீனா ஷம்தாசனி (Ravina Shamdasani) இலங்கை அரசைக் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமானது. ஏற்கனவே இவ்வாறான பல காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில், இன்னமும் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ரவீனா வலியுறுத்தினார்.
இலங்கையில் தற்போது 5,653 காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகள் தேங்கியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.