2011-07-29 15:33:01

பாலியல் கல்வி கற்பிப்பதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமையைத் திருப்பீடம் ஐ.நா.வுக்கு நினைவுபடுத்துகிறது


ஜூலை 29,2011. இளையோர் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கொள்கைகள், மனிதப் பாலியல் கூறுகள், இனவிருத்தி நலவாழ்வு உள்ளிட்ட விவகாரங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதற்குக் கொண்டிருக்கும் உரிமையை மதிப்பதாய் இருக்க வேண்டும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
இளையோர் குறித்த ஐ.நா.நிறுவனத்தின் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட், பிள்ளைகள், ஒழுக்கநெறி சார்ந்த பொறுப்புணர்வையும் பிறரை மதிக்கும் நற்குணத்தையும் குடும்பங்களில் கற்றுக் கொள்கின்றனர் என்றார்.
வன்முறையும் பிளவுகளுமற்ற, அதேவேளை அமைதியும் நல்லிணக்கமும் கொண்ட சமுதாயச் சூழலில் ஒவ்வோர் இளைஞனும் இளைஞியும் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் பேராயர் சுள்ளிக்காட் நினைவுபடுத்தினார்.
வரும் ஆகஸ்டில் மத்ரித்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமையில் நடக்கும் உலக இளையோர் தினம், மனிதன் குறித்த உண்மையில் வேரூன்றப்பட்டுள்ள ஆன்மீகக் கூறுகளின் முக்கியத்துவத்தை இளையோர் கற்றுக் கொள்ள உதவுவதாக இருக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 18 முதல் 21 வரை மத்ரித்தில் நடைபெறும் 13வது உலக இளையோர் தினத்தில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.