2011-07-28 15:26:39

சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான ஏக்கத்தின் வெளிப்பாடே மக்கள் எழுச்சி, என்கிறார் துனிசிய பேராயர்


ஜூலை 28, 2011. துனிசியாவில் 23 ஆண்டு ஆட்சி செய்த அரசுத்தலைவர் நீக்கப்பட்டதற்கும், தற்போது, வரும் அக்டோபரில் தேர்தல் இடம்பெறுவதற்கும் காரணமான மக்கள் எழுச்சியானது, சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான ஏக்கத்தின் வெளிப்பாடு என்றார் துனிசிய பேராயர் Maroun Lahham.
ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் காலடி எடுத்து வைத்திருக்கும் துனிசியாவில் மிகச்சிறுபான்மையினராக வாழும் கத்தோலிக்கர்கள், எதிர்தரப்புக்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதுடன், இசுலாமிய உலகிற்கும் மேற்கிற்கும் இடையேயான பாலமாகச் செயல்பட ஆவல் கொண்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார் பேராயர்.
ஒருபக்கம் புரட்சியையும் மறுபக்கத்தில் ஜனநாயகப் பாதைக்கான ஏக்கத்தையும் கொண்டிருக்கும் துனிசியாவில் ஒருவிதமானப் பதட்டநிலைகள் இடம்பெறுவதாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது உரைத்த பேராயர் Lahham, இவ்வளவு காலமும் அரசைக்கண்டு மக்கள் பயந்து வந்தனர், ஆனால் தற்போது மக்கள்சக்தியைக் கண்டு அரசு அஞ்சி வருகின்றது என மேலும் கூறினார்.
இசுலாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட துனிசியாவில் 1கோடி இசுலாமியர்களிடையே 22,000 கத்தோலிக்கர்களே வாழ்கின்றனர். இங்குள்ள 11 பங்குத்தளங்களில் 49 குருக்கள் 121 பெண்துறவிகள் பணியாற்றுவதுடன் 11 பள்ளிகளையும் நடத்துகின்றனர். இக்கத்தோலிக்கப் பள்ளிகளில் 6,000 இசுலாமிய மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.