2011-07-27 16:25:20

மெக்சிகோ நகரில் படிக்காத எழுபது இலட்சம் இளையோர் குற்றக்கும்பல்களால் பயன்படுத்தப்படும் ஆபத்து - மெக்சிகோ உயர்மறைமாவட்டம் கவலை


ஜூலை27,2011. மெக்சிகோ நகரில் எழுபது இலட்சம் இளையோர் கல்வியறிவு பெறாமலும் வேலை கிடைக்காமலும் இருக்கும்வேளை, இவர்கள் குற்றக் கும்பல் அமைப்புக்களினால் பயன்படுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்று மெக்சிகோ உயர்மறைமாவட்டம் கூறியது.
மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் "Desde la Fe" என்ற வார இதழில் வெளியான செய்தியின்படி, மெக்சிகோவில் திட்டமிட்டக் குற்றக் கும்பல்கள் வழங்கும் பணத்தை, தங்களது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும்கூட அதை வேலையற்ற இளையோர் பெற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை என்றும் தற்சமயம் சிறைகளில் இருப்போரில் 80 விழுக்காட்டினர் 20க்கும் 35 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் தெரிய வருகிறது.
வன்முறைக் குற்றவாளிகளில் பத்துக்கு ஒன்பது பேர் இளையோர் என்றும் "Desde la Fe" கூறுகிறது.
இலத்தீன் அமெரிக்காவில் 15க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய நான்கு கோடி இளையோரின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கின்றது, ஏனெனில் இவர்களுக்குப் படிப்போ வேலையோ கிடையாது என்றும் அவ்விதழில் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.