2011-07-27 17:31:20

ஜூலை 28, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


கேரளமாநிலம் கோட்டயம் அருகே குடமாளூர் என்ற சிறிய கிராமத்தில் 1910 ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிறந்தவர் இந்தியாவின் முதல் புனிதை அல்போன்ஸம்மாள். இயற்பெயர் அன்னக்குட்டி. அல்போன்ஸம்மாளுக்கு ஒருமாதம் தாண்டுவதற்கு முன்னரே தாய் இறந்துபோனார்.
மிக இளம்வயதிலேயே துறவு அவரை கவர்ந்திழுத்தது. 1927 மே 7 அன்று பிரான்ஸிஸ்கன் கிளாரிஸ்ட் துறவுச் சபையில் சேர்ந்தார் அல்போன்ஸம்மாள். 1928 ஆகஸ்ட் 2 ஆம் தேதி பரணங்ஙானம் கிளாரா மடம் கோயிலில் அன்னக்குட்டி என்ற இவர், அல்போன்ஸா என்ற பெயர் தாங்கி துறவு வாழ்வைப் பூண்டார்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியையாகச் சில காலம் பணியாற்றினார் புனித அல்போன்ஸா. அவரிடம் கல்விகற்ற சிறு குழந்தைகள் அவர் மேல் அளவிலா அன்பு கொண்டிருந்தார்கள். உண்மையில் அவரைப் புனிதராக அடையாளம் கண்டவர்கள் அக்குழந்தைகளே. அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அக்குழந்தைகள் வழியாகத்தான் கேரளத்தில் மத எல்லை தாண்டி இந்துக்கள் நடுவேயும் அல்போன்ஸம்மாள் பெரும்புகழ் பெற்றார். இன்றும் அந்தச் செல்வாக்கு நீடிக்கிறது.
துன்பங்களை ஏற்றுக்கொள்வதில் அல்போன்ஸம்மாளின் மனம் பல பரிணாமங்களை கண்டது. வலியை இறைவனின் பரிசு என்றே குறிப்பிட்டார் அவர். ‘எனக்கான சிலுவையை எனக்குக் கொடு’ என்ற அவரது பிரார்த்தனை மிகப் புகழ்பெற்ற ஒன்று
1946 ஜூலை 28ம் நாள் தன் 35ம் வயதில் அல்போன்ஸம்மாள் மரணம் அடைந்தார். அப்போது அந்த மரணம் பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை. ஆனால், பின்னர் அவர் குழந்தைகளின் நினைவில் மறுபிறப்பு எடுத்தார். அவர்கள் அவரை மறக்கவே இல்லை. அவரது கல்லறையில் வேண்டிக்கொண்டால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைப்பதாக குழந்தைகள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை சிலவருடங்களில் வலுப்பெற்றது. குழந்தைகளுக்கு நோய் வந்தால் பெற்றோர் அங்கே வேண்டுதல் செய்ய ஆரம்பித்தார்கள். மெல்ல மெல்ல அல்போன்ஸம்மாள் மக்கள் மனதில் புனிதராக ஆனார். 1986 பெப்ரவரி மாதம் இந்தியா வந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அல்போன்ஸம்மாவை அருளாளராக அறிவித்தார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2008 அக்டோபர் 12ம் தேதி இவரை புனிதர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இவரின் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
1. கேரள அரசு அல்போன்சாவின் சமாதி இருக்கும் பரணங்ஙானத்திற்குச் செல்லும் சாலையை 3 கோடி ரூபாய்ச் செலவில் புதுப்பித்துள்ளது.
2. புனித அல்போன்சாவைக் கௌரவிக்கும் படியாக இந்தியஅரசு 19 ஜூலை 1996ஆம் வருடம் அவருடைய தபால் தலையை வெளியிட்டது. இப்புனிதையின் பிறப்பு நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் 2009ல் துவக்கப்பட்டபோது, இந்திய அரசு அவர் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு கௌரவித்தது.
அல்போன்ஸம்மாள், இந்தியப் பெண்மையின் அளவிலாப் பொறுமைக்கும் கருணைக்கும் இன்னொரு மகத்தான சான்று என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.








All the contents on this site are copyrighted ©.