2011-07-27 16:26:24

சுவாசிலாண்ட் நாட்டில் சனநாயகச் சீர்திருத்தங்களுக்கு ஆயர்கள் அழைப்பு


ஜூலை27,2011. சுவாசிலாண்ட் நாட்டில் வறுமையும் திறமையற்ற அரசியல் நிர்வாகமும் ஊழலும் மிகுந்து காணப்படுவது குறித்து தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலை குறித்து கவலை தெரிவித்த தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள், சுவாசிலாண்டில் 1973ம் ஆண்டின் அவசரகாலநிலை விதிமுறையை அகற்றி, அரசியல் நடவடிக்கைகள் சுதந்திரமாக நடைபெறுவதற்கு வழிவகுக்குமாறு அந்நாட்டு அரசர் மூன்றாம் Mswati க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தை அங்கீகரிக்கவும், சனநாயக அரசுக்கு உறுதி வழங்கும் அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கானப் பாதையைத் திறந்து விடவும் சுவாசிலாண்ட் அரசருக்கு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆயர்கள்.
தென்னாப்ரிக்காவுக்கும் மொசாம்பிக் நாட்டுக்கும் இடையே அமைந்துள்ள சிறிய நாடாகிய சுவாசிலாண்ட், உலகிலே அதிகமான எய்ட்ஸ் நோயாளிகள் விகிதத்தைக் கொண்டுள்ளது. மக்களின் ஆயுட்காலமும் மிகக்குறைவு. அதாவது 32 ஆண்டுகள். வேலைவாய்ப்பின்மை 40 விழுக்காடாகும். அந்நாட்டின் 70 விழுக்காட்டு மக்கள் ஒரு நாளைக்கு 6 டாலருக்குக் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். மேலும், அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கென, அந்நாட்டில் 37 வருடங்களாக அவசரகாலநிலை அமலில் இருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.