2011-07-26 16:24:51

விவிலியத் தேடல் - இறைவனே உனக்கு ஆதரவு - திருப்பாடல் 55


ஜூலை26,2011. RealAudioMP3 ஜூலியஸ் சீசர். இவர் கி.மு 100 முதல் கி.மு 44 வரை வாழ்ந்தவர். அக்கால உரோமைப் பேரரசின் முக்கிய இராணுவத் தலைவர். முக்கிய அரசியல் தலைவர். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவர். உரோமைக் குடியரசை உரோமானியப் பேரரசாக மாற்றியமைத்ததில் மிக முக்கிய பங்காற்றியவர். உரோமைச் சமுதாயத்திலும் அரசிலும் பெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். எனினும், அப்பேரரசின் ஒரு செனட்டர் குழு இவரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியது. கி.மு 44, மார்ச் 14ம் தேதி இந்தக் குழு ஒரு பொய்யான புகார் எழுதி அதை சீசர் வாசிக்குமாறு அழைத்தது. சீசர் அவையில் அதை வாசிக்கத் தொடங்கியதும் இந்தத் துரோகக் குழுவில் இருந்த ஒருவன் அவருடைய நீண்ட மேலாடையை பிடித்து இழுத்தான். உடனடியாக மற்றவர்கள் அவர் கழுத்தில் குத்தினார்கள். கண்மூடிக் கண் திறப்பதற்குள் அறுபது பேர் ஒருவர் மாற்றி ஒருவராகக் குத்தத் தொடங்கினர். சீசர் 23 தடவைகள் குத்தப்பட்டார் என்று வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படிக் குத்திய 60 பேரில் ஒருவன் புரூட்டஸ். இவன் ஜூலியஸ் சீசரின் மிக நெருங்கிய நண்பன். புரூட்டசைத் தனது சொந்த மகன் போல் சீசர் வளர்த்திருந்தார். சீசருக்குப் புரூட்டஸ் மீது அப்படியொரு நம்பிக்கை இருந்தது. அவரது உள்வட்டத்தில் ஒருவராக இருந்தான். இந்தச் சதிகாரக் கூட்டத்தில் ஒருவனாகப் புரூட்டஸ் செயல்பட்டது மட்டும் சீசருக்குத் தெரியாமல் போனது. இந்த புரூட்டஸ், இந்தத் துரோகிகளில் ஒருவனாகத் தனது முதுகில் குத்தியதைத் திரும்பிப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் சீசர். அப்போது சீசர், ““Et tu,Brute?” “You too Brutus??”. நீயுமா புரூட்டஸ்?”, என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு முன்னர் தன்னைக் குத்தியவர்களைக் கையால் தடுத்துக் கொண்டிருந்த சீசர், தனது நெருங்கிய நண்பன் புரூட்டஸ் தனது முதுகில் குத்தியவுடன் தனது முகத்தைத் தனது மேலாடையால் மூடிக் கொண்டு அவர்களின் வன்தாக்குதல்களுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. எந்த அளவுக்கு இந்த அறுபது பேரும் குத்தினார்கள் என்றால் அவர்களே ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார்கள். புரூட்டசுக்கும் கையில் காயமாம். இந்த உரோமைத் தளபதி சீசர், உரோமைப் பேரரசை ஆட்சி செய்தவர் உதிர்த்த கடைசி சொற்கள் “You too, Brutus ??” என்பதுதான்.
“நீயுமா புரூட்டஸ்??” “Et tu,Brute?” “You too Brutus??”. இந்த வார்த்தைகளைத்தான் நட்புத் துரோகத்திற்கு, நம்பிக்கைத் துரோகத்திற்கு எடுத்துக்காட்டாகப் பலரும் பயன்படுத்துவார்கள். தனது பகைவன் குத்தி ஏற்படுத்தும் காயத்தைக் காட்டிலும் ஒரு நம்பிக்கைகுரிய நண்பனின் துரோகம், அந்த நண்பனின் மறுதலிப்பு ஏற்படுத்தும் காயம் மிகவும் கொடூரமானது. இத்தகைய துரோகிகள், முதுகில் குத்துபவர்கள், இத்தகைய நன்றிகெட்டவர்கள் உலகில் எல்லா இடங்களிலும் எல்லா சமுதாயங்களிலும் இருக்கிறார்கள். இதில் இனம், நிறம், மொழி என்ற பாகுபாடு கிடையாது. இம்மாதிரியானத் துரோகிகளை, அன்பு நெஞ்சங்களே, உங்களில் பலர் உங்களது வாழ்க்கையிலும் சந்தித்திருக்கலாம். இவ்வுலகப் படைப்பின் தொடக்க முதற்கொண்டு இந்தத் துரோகிகளைக் காண முடிகின்றது.
படைப்பின் முதல் பெற்றோரின் மூத்த மகன் ஆபேல் தனது தம்பி காயினுக்குத் துரோகம் செய்து அவனையே கொலை செய்தான். இஸ்ரயேல் மக்களைப் பாரவோன் மன்னனின் அடிமைத்தனத்தின்று மீட்டு வந்த மோசேக்கு எதிராக அவரது தங்கை மிரியம் பேசினாள்(எண்.12,1). மோசேக்குப் பின்னர் இஸ்ரயேலை வழிநடத்திய ஜோசுவாவுக்கு ஆக்கான் துரோகம் செய்தான்(யோசு.7,1). மன்னன் தாவீதுக்கு எதிராக அவரது சொந்த மகன் அப்சலோம் குழப்பம் செய்தான்(2சாமு.15). நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அவரோடு உண்டு மகிழ்ந்து அவரோடு மூன்றாண்டுகள் வாழ்ந்த யூதாஸ் இஸ்காரியோத் காட்டிக் கொடுத்தான். எனவே உலகில் ஒவ்வோர் ஆபேலுக்கும் ஒரு காயின், ஒவ்வொரு மோசேக்கு ஒரு மிரியம், ஒவ்வொரு தாவீதுக்கு ஓர் அப்சலோம், ஒவ்வோர் இயேசுவுக்கு ஒரு யூதாஸ் இஸ்காரியோத் இருக்கின்றனர். ஆனால் இம்மாதிரியான துரோகிகளை எதிர்கொள்ளும் நேரங்களிலும், இம்மாதிரியான துரோகங்களை அனுபவிக்கும் நேரங்களிலும் மனம் எவ்வளவு துடித்துச் சுக்கு நூறாய்க் கிழிகின்றது. அந்த நேரத் துயர உணர்வுகளை சொற்களால் விவரிக்க முடியாது. வார்த்தைகளால் வடிக்க முடியாது. எப்படியெல்லாம் யார் யாரிடமெல்லாம் புலம்புகிறோம்? எவ்வாறெல்லாம் செபிக்கின்றோம்?
கடவுளே, எனது முதுகில் குத்திவிட்டு ஓடுகிறவன், எனது பகைவனாக இருந்தால்கூடத் தாங்கிக் கொள்வேன், ஆனால் அவனோ என் தோழன். என் நண்பன், என்னோடு நெருங்கிப் பழகியவன் என்னை இழித்துரைக்கின்றவன், எனக்கு இவ்வளவு மோசம் செய்கின்றவன் என்றுதான் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறோம். என்னிடம் மிகுந்த பாசமுள்ளவனாகக் காட்டியவன், என்மீது மிகுந்த கரிசனை உள்ளவனாகச் செயல்பட்டவன், அத்தகையவன் எனக்கெதிராகச் சதி செய்கிறான், எனக்கு எதிராகத் தீய சக்திகளைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்து சிரிக்கிறான் என்று மனது வெதும்பியவர்களைக் கேட்டிருக்கிறேன். உடன்பிறந்த தங்கை குடும்பமே தனது பிள்ளைகளுக்கு எதிராகத் தீயச் சக்திகளைத் தூண்டி தீவினை செய்கிறாள் என்று அழுதழுது அங்கலாய்க்கும் அக்காவைப் பார்த்திருக்கிறேன்.
அன்பர்களே, இம்மாதிரியான ஒரு கசப்பான அனுபவத்தையே திருப்பாடல் 55ல் வாசிக்கிறோம். குறிப்பாக, இப்பாடலில் 12 முதல் 15 வசனங்கள் வரை இந்தப் புலம்பல் தெளிவாக இருக்கிறது. “என் நண்பரே எனக்கு எதிரிகள்” என்று இப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். இப்பாடலில் முறையான அமைப்பும், கட்டுக்கோப்பும் இல்லாததால், அப்சலோம் தனது தந்தை தாவீதுக்கு எதிராகக் குழப்பம் செய்த போது இதனைத் தாவீது பாடியிருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர். எனினும் ஒரு தனியாளின் புலம்பலாக இப்பாடல் உள்ளது என்றே விவிலிய அறிஞர்கள் சொல்கிறார்கள். தன் நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு மறுதலிக்கப்பட்டு தனிமையாய் விடப்பட்டு, பாடுகள் அனுபவித்து உயிர்ப்பின் மூலம் சாவை வெற்றி கண்ட இயேசு மெசியாவுக்கு இப்பாடல் மிகவும் பொருந்தி அமைகின்றது.
இறைவா, என் எதிரிகள் என்னைத் தாக்குகின்றனர் எனக்கு உதவும், புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகளை எனக்கு யார் அளிப்பார்? இருந்திருந்தால் நான் பறந்து நெடுந்தொலைவு போயிருப்பேன். துன்பமெனும் பெருங்காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேன் என்று மனவேதனையின் உச்சத்தில் ஆண்டவரிடம் செபிக்கிறார் இப்பாடல் ஆசிரியர்.
தன்னோடு நெருங்கிப் பழகினவன், தனது நண்பன் தனக்கு எதிராக இவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டான் என்று இந்தத் திருப்பாடல் ஆசிரியர் துடித்தாலும், இறுதியில் அவர் சரணடைவது கடவுளிடமே. கடவுள்தான் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க முடியும் என்பது அவரின் ஆழமான நம்பிக்கை. திருப்பாடல் 55, 22ல் ஆசிரியர் சொல்கிறார்....
ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு. அவர் உனக்கு ஆதரவளிப்பார். அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுறவிடமாட்டார்.....
16, 17 ஆகிய வசனங்களில் சொல்கிறார்
நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன். ஆண்டவரும் என்னை மீட்டருள்வார். காலை, நண்பகல், மாலை வேளைகளில் நான் முறையிட்டுப் புலம்புகிறேன். அவர் என் குரலைக் கேட்டருள்வார்....
வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருக்கும் நேரங்களில் கடவுளிடம் நம்பிக்கை வைப்பதும் அவரிடம் செபிப்பதும் எளிது. ஆனால், துன்பநெருக்கடியில், வேதனையின் உச்சகட்டத்தில் கடவுளிடம் நம்பிக்கை வைத்துள்ளேன் என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல. அன்பு நேயர்களே, நமது நெருங்கிய நண்பர்கள் மறுதலிக்கலாம், புறக்கணிக்கலாம், நமது சொந்த வாழ்க்கையின் இரகசியங்கள் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டு நம்மைக் காட்டிக் கொடுக்கலாம், உதாசீனப்படுத்தலாம், கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். நமது குடும்பத்தினர் கைவிடலாம், நம்முடைய நெருங்கிய அன்புறவுகள் நம்மைப் பயன்படுத்தலாம், நச்சு கலந்த உணவாக வாழ்க்கை நமக்கு கசக்கலாம், ஆனால் 55ம் சங்கீத ஆசிரியர் சொல்கிறார் –
கடவுள் மீட்கிறார். கடந்த காலத்தில் காத்து வந்த தேவன் இப்பொழுதும் காக்கிறார், எனக்கும் எனது எதிரிக்கும் நல்லது எது என்பது அவருக்குத் தெரியும் என்று.
ஆதலால் இறைவன் மீதான நம்பிக்கையை மட்டும் எவ்வேளையிலும் இழக்காமல் வாழ வேண்டும். கடந்த வாரம் நாம் கேட்ட திருப்பாடல் 52லும் பாடல் ஆசிரியர், நான் இறைவனின் பேரன்பில் நிலையாக நம்பிக்கை வைத்துள்ளேன் என்றுதான் செபித்தார். வாழ்க்கையில் இறைவன்துணை நிச்சயமாக தேவை என்பதில் உறுதியாய் இருக்க வேண்டும். அப்போது எந்த நண்பரின் சதித்திட்டமும் புறக்கணிப்பும் நம்மை நிலைகுலையச் செய்யாது.
ஹஸ்ரத் அலி என்னும் மகான் பயாசித் என்ற பெரியவரைச் சந்திப்பதற்காக ஒரு மாலைப் பொழுதில் அவருடைய குடிலுக்குச் சென்றார். பயாசித் வீட்டில் இல்லையென்று அறிந்ததும் அவர் வீட்டுக்குத் திரும்பாமல் இரவு முழுவதும் பயாசித்துக்காகக் காத்திருந்தார். மறுநாள் காலை இம்மகான் இடுகாட்டில் பரவச நிலையில் இருப்பதைக் கண்டார். கிழக்கில் உதித்த சூரியக் கதிர்கள் பயாசித்தின் முகத்தின் மீது விழுந்த பின் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். ஹஸ்ரத்அலி அவரிடம், “கடவுளின் நண்பரே, நேற்று இரவு நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் என்னிடம் சொல்லுங்களேன்” என்றார் பணிவுடன். அதற்குப் பயாசித், “நேற்று இரவு கடவுள் எனக்கு இருபது வரங்களை அளித்தார். ஆனால் ஒவ்வொரு வரமும் என் தோள்மீது வைக்கப்பட்ட பாறாங்கல் என்றே உணர்கிறேன். அவை கடவுளுக்கும் எனக்கும் இடையில் ஒரு மாயத் திரையை உண்டாக்கி விடுகின்றன” என்றார். அதைக் கேட்ட ஹஸ்ரத்அலி, கண் கலங்கிய நிலையில், பயாசித்தின் பாதங்களைத் தொட்டு, “குருவே என்னைத் தங்களுடைய சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். உடனே பயாசித், நினைவில் வைத்துக் கொள். “உனக்கு ஆதாமின் அனைத்து நற்குணங்கள், கபிரியேல் வானதூதரின் தூய்மை, தந்தை ஆபிரகாமின் அனைத்துச் செல்வங்கள், முகமதுவின்அன்பு, மோசேயின் ஆவல் ஆகியவை அளிக்கப்படலாம். அப்படியிருந்தும் நீ கடவுளைவிட்டு மிகவும் தள்ளியே இருப்பாய். இவையனைத்தும் மாயத்திரைகளே. கடவுள் வேண்டும் என்று மட்டும் நினை. எல்லாமே உனைத் தேடி வரும்” என்றார்.







All the contents on this site are copyrighted ©.