2011-07-26 16:36:47

சொமாலிய அகதிகளிடையே இயேசு சபையினரின் பணி


ஜூலை 26, 2011. வறுமை காரணமாக கென்யா மற்றும் எத்தியோப்பியாவில் நுழையும் சொமாலிய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு உதவுவதற்கான நிதியுதவிகள் தேவைப்படுவதாக விண்ணப்பித்துள்ளது இயேசு சபையினரின் அகதிகளுக்கான JRS அமைப்பு.
பல ஆண்டுகளான மோதல்களாலும் வறட்சியாலும் 20இலட்சம் மக்கள் வரை தங்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற கிழக்கு ஆப்ரிக்க JRS அமைப்பின் இயக்குனர் குரு Frido Pflueger, இம்மாதம் 20ந்தேதி வரை 1 இலட்சத்து 20 ஆயிரம் சொமாலியர்கள் கென்யாவிலும் எத்தியோப்பியாவிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தானிய உற்பத்திக்குறைவு, மத்திய அரசின் நிர்வாகக் குறைபாடு, புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முடியாமை போன்றவைகளால் மக்களின் துன்பங்கள் அதிகரித்துள்ளதாக இயேசு சபை குரு மேலும் கூறினார்.
JRS என்ற இயேசு சபையினரின் அமைப்பு, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஐந்து இலட்சம் அகதிகள் மற்றும் குடிபெயர்ந்தோரிடையே கல்வி, நலஆதரவு, மற்றும் சமூகப்பணிகளை ஆற்றி வருகின்றது.







All the contents on this site are copyrighted ©.