2011-07-26 16:33:38

ஐ.நா. இளையோர் கருத்தரங்கு குறித்து பேராயர் சுள்ளிக்காட்


ஜூலை 26, 2011. வருங்காலத்திற்கான நம்பிக்கையாக இருக்கும் இளையோரை நாடுகளிடையே, கலாச்சாரங்களிடையே மற்றும் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளைக் கட்டியெழுப்பும் கருவிகளாக ஐநாவும் கத்தோலிக்கத் திருச்சபையும் நோக்குவதாக உரைத்தார் பேராயர் ஃபிரான்சிஸ் சுல்லிக்காட்.
இத்திங்களும் செவ்வாயும் ஐ.நா. நிறுவனத்தில் இடம்பெற்ற இளையோர் மாநாடு குறித்துப் பேட்டியளித்த ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்வு முறையை இளைஞர்களில் உருவாக்க ஐ.நா. நிறுவனம் கைக்கொள்ளவேண்டிய பொறுப்புணர்வுகளை வலியுறுத்தினார்.
வருங்காலத்தைக் கட்டியெழுப்பும் பணியில் இளையோருக்கு எடுத்துக்காட்டுகளாகச் செயல்படவேண்டிய இன்றையத் தலைமுறையினரின் கடமையையும் சுட்டிக்காட்டினார் பேராயர்.
வாழ்வதற்கான உரிமை குறித்த விவகாரங்கள், எயிட்ஸ் நோய்த் தொடர்பான ஒழுக்கரீதிக் கேள்விகள், குழந்தைகள் மீதான பெற்றோர்களின் உரிமைகள் போன்றவைகளில் ஐநாவின் நிலைப்பாடு முரண்பாடுடையதாக இருப்பதாகக் கவலையை வெளியிட்ட ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், இது கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஒரு சவாலாக இருப்பதாகவும் உரைத்தார்.
வாழ்விற்கு ஆதரவானப் போராட்டத்திற்கு இளைஞர்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அவர், சிசுக்களைக் கருவிலேயே கொல்வதால் அல்ல, மாறாக, சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மீது செய்யப்படும் முதலீடுகளாலேயே வறுமையை விரட்டமுடியும் என மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.