2011-07-25 16:42:27

அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சு தோல்வி


ஜூலை 25, 2011. ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹனவுடன் கடந்த வாரம் நியூயார்க்கில் இடம்பெற்ற சந்திப்பின் போது பாலித கோஹன தலைமையிலான குழுவினர், இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று முழுமையாக மறுப்பு வெளியிட்டுள்ளதாக Amnesty International எனும் அனைத்துலக மனித உரிமைகள் கழகம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் கழகம் வித்தியாசமான அணுகுமுறையுடன் நடத்திய உறுதியான கலந்துரையாடலுக்கு இலங்கைக் குழுவினர் இணங்காத நிலையில் இந்த சந்திப்பு வெற்றி பெறவில்லை என்று அனைத்துலக மனித உரிமைகள் கழகத்தின் இலங்கைக்கானச் சிறப்பு நிபுணர் ஜிம் மெக்டொனாலட் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மனித உரிமைகள் கழகத் தலைவர் ஜோஸ் லூயிஸ் டய்சுக்கும் பாலித கோஹனவுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான சேனல் 4 காணொளித் தொடர்பிலேயே கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து கருத்துரைத்த பாலித கோஹன, இலங்கையின் நீண்ட வரலாற்றை கொண்ட நீதித்துறை கலாச்சாரத்தை இந்தப் பிரச்சனைக்காக மாற்றிக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாலித கோஹனவுடனான சந்திப்பின்போது அனைத்துலக மனித உரிமைகள் கழகம், இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதனை பாலித கோஹன பலமுறை நிராகரித்ததாக மெக்டோனோல்ட் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.