2011-07-23 16:01:07

மலாவியில் விலைவாசி உயர்வு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆயர்கள் அழைப்பு


ஜூலை 23,2011. மலாவியில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தி எண்ணெய்யின் விலையேற்றத்தை எதிர்த்து நாடு முழுவதும் பரவலாக வன்முறைப் போராட்டங்கள் இடம் பெற்று வரும் வேளை, அரசும் எதிர்தரப்பினரும் உரையாடலில் ஈடுபடுமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நாட்டின் முக்கிய நகரங்களில் இடம் பெற்று வரும் அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் இரண்டு நாட்களில் மட்டும் 18 பேர் இறந்தனர் மற்றும் 50 பேர் வரை காயமடைந்துள்ள வேளை, மலாவி மக்கள் எல்லா வகையான வன்முறைகளையும் சூறையாடல்களையும் கைவிடுமாறு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மலாவி அரசுத்தலைவர் Bingu wa Mutharika ன் அரசு, உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கானப் பாதையைத் திறக்குமாறும் அந்நாட்டு ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே, Mzuzu நகரில் வன்முறைக்குப் பலியான ஏழுபேரை முறைப்படி அடக்கம் செய்வதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்காததால் அவர்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும், எட்டு நிருபர்கள் காவல்துறையால் பலமாக அடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண் வானொலி நிருபர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகம் தெரிவித்தது.
உலகின் மிக ஏழைநாடுகளுள் ஒன்றான மலாவியில் 75 விழுக்காட்டு மக்கள், ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.