2011-07-23 15:51:10

ஞாயிறு சிந்தனை – திருவழிபாட்டு ஆண்டின் 17ம் ஞாயிறு


ஜூலை23,2011. ப RealAudioMP3 ல திறமையாளர்களை நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்திருக்கலாம், அல்லது, கவனித்திருக்கலாம். கிடுகிடுவென்று உயர்ந்து வருவார்கள். சடாரென்று ஒரு கட்டத்தில் நிலை குத்தி நின்றுவிடுவார்கள். அதன்பின் அவர்களிடம் புதிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. ஏன்? என்ன காரணம்? அதற்குப் பின்னும் வளர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்காதா என்ன? இருக்கும். கட்டாயம் இருக்கும். ஆனாலும், கிடைத்திருப்பதை விட்டுவிடக் கூடாது என்ற அச்சத்துடன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுவார்கள். அதற்கு அப்புறம் வளர்ச்சி எப்படி இருக்கும்?
இன்றைய மத்தேயு நற்செய்தி 13: 44 வசனத்தில் நிலத்தில் மறைந்திருந்த புதையலைக் கண்டவர் அதைப் பெறுவதற்காக அனைத்தையும் விற்று அந்த நிலத்தை வாங்குகிறார். ஆனால், நம்மில் பலரோ அதை வாங்காமல், உள்ளது போதும் என இருக்கும் நிலையைத் தக்கவைக்க முயல்கிறோம்.
சிறியதொரு மண் தொட்டியில் வேரோடு வைத்து விற்கப்பட்ட ஒரு செடியை வாங்குகிறீர்கள். பத்திரமாக நிழலில் வைத்துப் பார்த்துக் கொண்டால், தொட்டியில் உள்ள செடி ஓரளவு வேகமாக வளரும். பிறகு, ஒரு கட்டத்தில், போதிய இடமின்றி அது தன் வளர்ச்சியைக் குறுக்கிக் கொள்ளும். அதேச் செடியை பூமியில் எடுத்து நட்டிருந்தால் அது பெரிய மரமாக வளர்ந்திருக்கும். கடைசி வரை புதிது புதிதாக கிளைகளை எல்லாத் திசைகளிலும் வான் நோக்கிப் பரப்பியிருக்கும். பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கி, பழங்களை உண்டு மகிழ்ந்திருக்கும். மனிதர்களும் நிழலுக்கு அம்மரத்தின் அடியில் தஞ்சம் புகுந்திருப்பார்கள். உங்கள் வாழ்வும் அப்படித் தான்! வளர வேண்டும், விண்ணைத் தொட வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் தகதகத்துக் கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் மண் தொட்டியை உடைத்துப்போட நீங்கள் தயங்குவதால் வளரமுடியாமல் தவிக்கிறீர்கள்.
மத். 13: 45ல் குறிப்பிடுவதுபோல், உள்ளவற்றை விற்று விலையுயர்ந்த முத்தை வாங்க நீங்கள் தயங்குகிறீர்கள். மத். 13: 44ல் இயேசு சொல்வதற்கு மாறாக, புதையல் நிலத்தை வாங்க நீங்கள் பயப்படுகிறீர்கள். இச்செயல்பாடு எந்த விதத்தில் நியாயம்? உங்களைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டிருக்கும் வலைகளிலிருந்து நீங்கள் விடுபட்டால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்.
அரசனைத் தேடி ஓர் இளைஞன் அவ்வப்போது அரண்மனைக்கு வருவான். அவனுக்கு இராஜ மரியாதை தந்து, நிறைய செல்வங்களைக் கொடுத்து வழியனுப்புவான் அரசன். அத்தனையையும் தொலைத்துவிட்டு இளைஞன் மீண்டும் அரசன் முன் வந்து நிற்பான். அரசனும் முகம் கோணாமல் மறுபடியும் அவனுக்கு வாரி வழங்கி அனுப்பி வைப்பான். ஒரு முறை அரசனிடம் அமைச்சர் மெல்லக் கேட்டார்: "மன்னா, நீங்கள் அந்த இளைஞனுக்குக் கொடுக்கும் செல்வத்தை அவன் பொறுப்பில்லாமல் தவறான நண்பர்களோடு சேர்ந்து வீணடித்து, அழித்துவிட்டு வருகிறான். எதற்காக மீண்டும் மீண்டும் அவனுக்கு பொன்னும் பொருளும் வழங்குகிறீர்கள்?" என்று. "அமைச்சரே, நான் பிறக்கும்போதே என் அம்மா இறந்து போனார்கள். அரண்மனைப் பணியில் இருந்த இவனது தாய்தான் இவனுடன் சேர்த்து எனக்கும் தாய்ப்பால் கொடுத்து வளர்த்தார். அதனால் இவனை என் சகோதரனாகவே நான் நினைக்கிறேன்" என்றார் அரசன்.
அடுத்த முறை அந்த இளைஞன் வந்தபோது, அரசனிடம் அவன் ஒரு விபரீத கோரிக்கையை முன் வைத்தான். “உங்களைச் சுற்றி புத்திசாலிகள் இருப்பதால்தான் நீங்கள் என்னைவிட மென்மையாக இருக்கிறீர்கள். உங்களது அமைச்சர் என்னுடன் இருந்தால், என்னாலும் இந்த அரசை ஆளமுடியும். எனவே, உமது அமைச்சரை என்னுடன் அனுப்பும்” என்று அரசனிடம் கேட்டான். என்ன செய்வது என்று புரியாமல் அரசன் திணறினார். அப்போது அமைச்சர், "மன்னா, உங்களுடன் பால் குடித்து வளர்ந்த உம் சகோதரனுக்கு உதவ, என்னுடன் பால் குடித்து வளர்ந்த என் சகோதரனை அனுப்பலாமே" என்றார்.
மறுநாள், அரசவைக்கு அமைச்சர் வந்தபோது, ஒரு எருமைக்கடாவைக் கயிற்றில் கட்டி இழுத்து வந்தார். எல்லாருக்கும் வியப்பு. ஒரு சிலர் சிரித்தனர். அப்போது அமைச்சர், "ஏன் சிரிக்கிறீர்கள்? இந்த எருமைக்கடாவும் நானும் ஒரே எருமைத் தாயின் பாலைத்தான் குடித்தோம். மன்னரின் சகோதரனுக்கு அமைச்சராக இருக்க என் சகோதரனை அனுப்புகிறேன்" என்றார்.
நாம் ஒரே தாயிடம் பால் குடித்து வளர்ந்திருக்கலாம். ஆனால், நம் உடலை, மனதை, உணர்வுகளை, சக்தியை எப்படித் திறம்பட பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் வளர்ச்சி அமையும்.
பொதுவாக உங்கள் நண்பர்களை நீங்கள் சந்திக்கும்போது என்னவெல்லாம் பேசுவீர்கள்? எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், எந்தக் கட்சி வெற்றிபெற முடியும், எந்த நடிகை மிக அழகு, நடிகரின் அந்தரங்க வாழ்வு பற்றிய விவாதம்... ஓசாமா, ஒபாமா, சோனியா பற்றிய எல்லா விவரமும் வைத்திருப்பீர்கள். இப்படி உலக நடப்புக்கள் எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே, உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறீர்கள்? உங்களது திறமையின் வீச்சாகிய முத்துக்களைப் பற்றி, புதையலைப் பற்றி எங்களுக்கு முழுமையாகத் தெரியுமா?
கண்ணாடி அணிபவர்களுக்கு முதன்முதலாக அதை அணியும்போது, வேண்டாத பாரமாக இருக்கும். பழக்கமான பின், அதைப்பற்றிய கவனமே இருக்காது. கவனிக்கப்படாவிட்டாலும், கண்ணாடி அதன் வேலையைத் திறம்படச் செய்துகொண்டு இருக்கும். அதுபோலத்தான் உங்கள் திறமை என்னும் முத்தும், புதையலும்.
சாலையில் வண்டி ஓட்டிப் பழகும்போது உங்கள் மொத்த கவனமும் ஓட்டுவதிலேயே இருக்கும். நல்ல பயிற்சி பெற்ற பிறகு, அதுபற்றிய பயமோ பதற்றமோ இல்லாமல் மிக இயல்பாக வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிப்பீர்கள் இல்லையா?
கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தானியம் விநியோகம் செய்யப்படாத வரை யாருக்கும் பயன் இல்லை. வீணாக மக்கி, குப்பைக்குத்தான் போய் சேரும். உங்கள் திறமை என்னும் புதையலையும் தேக்கி வைக்காதீர்கள். அவற்றைப் பயன்படுத்திக் கொண்டே இருந்தால்தான் பலன்.
புதிய வாய்ப்புக்களைத் துணிவோடு எதிர்கொள்ளப் பழகினால்தான் உங்கள் திறமை என்ற அபூர்வ முத்தும் முழுமையாகப் பரிமளிக்கும். அது உங்களை அடுத்திருக்கும் தளங்களுக்கு உயர்த்திக் கொண்டே போகும். விண்ணைத் தொட முயற்சி செய்வோம்.







All the contents on this site are copyrighted ©.