2011-07-22 15:58:18

கம்யூனிச வதைப்போர் முகாமில் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பெலாருஸ் கர்தினால் மரணம்


ஜூலை 22,2011. அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் திருச்சபையில் உயிரூட்டமுடன் நற்பணியாற்றிய பெலாருஸ் கர்தினால் Kazimierz Swiatek இறைபதம் அடைந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பெலாருஸ் கத்தோலிக்க ஆயர் பேரவைக்குத் தந்திச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, மறைந்த கர்தினால் Swiatek, கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபைக்கும் வீரத்துடன் சான்று பகர்ந்ததையும், குறிப்பாக, கஷ்டமான காலங்களில் வாழ்ந்த சாட்சிய வாழ்வையும், பின்னாளில் பெலாருஸ் நாட்டின் ஆன்மீக மறுபிறப்புக்கு மிகுந்த ஆர்வத்துடன் தனது பங்களிப்பை வழங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
தற்போதைய எஸ்டோனியக் குடியரசின் வால்காவில் 1914ல் போலந்து குடும்பத்தில் பிறந்தார் மறைந்த கர்தினால் Swiatek. இரஷ்யப் பேரரசரால் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இவரது குடும்பம், 1917ம் ஆண்டு இரஷ்யப் புரட்சிக்குப் பின்னா மீண்டும் பெலாருஸ் திரும்பியது.
1939ல் குருவான இவர், இரண்டு ஆண்டுகளிலேயே “புரட்சிகர அருட்பணியாளர்” என்று சோவியத் கம்யூனிசக் காவல்துறையால் முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1941ல் நாத்சி ஜெர்மனி சோவியத்தை ஆக்ரமித்த போது சிறையிலிருந்து தப்பித்து மேய்ப்புப்பணிகளைத் தொடர்ந்தார். ஆனால் 1944ல் மீண்டும் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகள் வதைப்போர் முகாம் தண்டனை கொடுக்கப்பட்டு கடும் குளிர் நிறைந்த சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார். 1954ல் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டார். 1994ல் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், 2006 வரை Minsk-Mohilev பேராயராகப் பணியாற்றினார். அதாவது தனது 91வது வயது வரைப் பணியாற்றினார்.
2011, ஜூலை 21ம் தேதி தனது 96வது வயதில் இறைவனடி சேர்ந்தார் கர்தினால் Swiatek.
இத்தாலிய கத்தோலிக்க அமைப்பு, இவரது சாட்சிய வாழ்வை 2004ல் கவுரவித்தது.







All the contents on this site are copyrighted ©.