2011-07-21 16:24:03

புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்க 11 மாநில முதல்வர்கள் உறுதி


ஜூலை 21, 2011. புகையிலைப் பொருட்கள் பாதிப்பிலிருந்து தங்கள் மாநிலத்தவரைப் பாதுகாக்க, அதற்குத் தடை விதிப்பதாக 11 மாநில முதல்வர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்தியாவில் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் 86 விழுக்காட்டினர் குட்கா சாப்பிடுவோர் என, அண்மை, தேசிய மற்றும் குடும்ப நலவாழ்வு நிறுவனத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இது குறித்துப் பேசிய தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பின் பொதுச் செயலர் சேகர் சல்கார், புகையிலைப் பழக்கத்தால், வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளான அசாம், கோவா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அருணாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சத்திஸ்கர், இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது முதல்வர்களைச் சந்தித்துப் பேசினர் என்றார்.
புகையிலை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை, கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலை விற்கத் தடை, புகையிலை பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் மாநில மக்களை, புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கைகள் அடங்கிய உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்ட 11 மாநில முதல்வர்களும், புகையிலைப் பாதிப்பைத் தடுத்து நிறுத்தப் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.