2011-07-21 14:15:26

ஜூலை 22 வாழ்ந்தவர் வழியில்....


நெப்போலியன் பிரான்சுவா ஜோசப் சார்ல்ஸ் போனபார்ட் அல்லது இரண்டாம் நெப்போலியன் (Napoléon François Joseph Charles Bonaparte) என்பவர் முதலாம் நெப்போலியனான நெப்போலியன் போனபார்ட்டின் மகன் ஆவார். இவர் பாரிசில் 1811ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்தார். இவர் பிறந்த மூன்று ஆண்டுகளில் அதாவது 1814ம் ஆண்டு முதலாவது பிரெஞ்சுப் பேரரசு முடிவுக்கு வந்தது. அப்போது அதன் பேரரசராக இருந்த நெப்போலியன் போனபார்ட் தனது முடிக்குரிய மகனை பிரான்சின் பேரரசராக அறிவித்து தனது பதவியைத் துறந்தார். 1815ம் ஆண்டு வாட்டர்லூ போரில் முதலாம் நெப்போலியன் தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தனது 4 வயது மகனைப் பேரரசராக அறிவித்து முடி துறந்தார். முதலாம் நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டதில் இருந்து அவர் தனது மகனைப் பார்க்கவில்லை. 1815ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதிகள் சபை, இரண்டாம் நெப்போலியனை அந்நாட்டின் தலைவராக அங்கீகரித்தது. எனினும், அதே ஆண்டு ஜூலை 7ம்தேதி அவரது பதவி திடீரென்று பறிக்கப்பட்டு பதினெட்டாம் லூயி பதவிக்கு வந்தார். இதனால் இரண்டாம் நெப்போலியன் தனது எஞ்சிய வாழ்நாளை ஆஸ்திரியாவில் செலவழித்தார். 1818ம் ஆண்டு அவருக்கு ரைக்ஸ்டார்ட் அரசின் இளவரசன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் பின்னர் 1832ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி தனது 21வது வயதில் காசநோய் காரணமாக வியென்னா நகரில் இறந்தார். இவரது இறப்பில் பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. இவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஜெர்மனியின் ஹிட்லரின் ஆணைப்படி 1940 ஆம் ஆண்டில் இரண்டாம் நெப்போலியனின் உடல் வியென்னாவில் இருந்து பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது தந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே சிறிது காலம் புதைக்கப்பட்டது. பின்னர் பாரிசுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.