2011-07-21 16:15:02

அணுஆயுதம் தொடர்புடைய ஒழுக்கரீதிக் கேள்விகள் கடந்த 60 ஆண்டுகளாக திருச்சபையால் எழுப்பப்பட்டு வருகின்றன


ஜூலை 21, 2011. அணுஆயுதங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்புடைய ஒழுக்கரீதிக் கேள்விகள் கடந்த 60 ஆண்டுகளாக திருச்சபையால் எழுப்பப்பட்டு வருகின்றன என்றார் ஐநாவிற்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கென்சாஸ் நகர் புனித வளன் மறைமாட்ட ஆயர் இராபர்ட் வில்லியம் ஃபின், அணுஆயுதம் குறித்த திருச்சபையின் படிப்பினைகள் பற்றி விவாதிக்க ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் சுள்ளிக்காட், அமெரிக்காவிற்கும் இரஷ்யாவிற்கும் இடையேயான பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான அழிவுதரும் ஆயுதங்கள் குறித்து என்னச் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார்.
இன்று 14 நாடுகளின் 111 இடங்களில் 20,000 அணு ஆயுதங்கள் உள்ளன என்ற பேராயர், உலகின் மக்கள் தொகையில் பாதிப்பேர் அணுஆயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளில் வாழ்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வோர் ஆண்டும் உலகில் அணு ஆயுதத்தைப் பாதுகாப்பது மற்றும் நவீனப்படுத்துவதற்கென 10,000 கோடி டாலர் செலவழிக்கப்படுகிறது என்பது குறித்த கவலையையும் வெளியிட்ட ஐநாவிற்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், இது ஏழை மக்களின் வளர்ச்சித் திட்டங்களிலிருந்து திருடப்பட்டவை எனவும் கூறினார்.
வளர்ச்சிக்கான அணுசக்தித் திட்டங்களை அணுஆயுதமாக மாற்றும் சக்தி 40 நாடுகளுக்கு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார் பேராயர் சுள்ளிக்காட்.
அணுஆயுதம் என்பது பாதுகாப்பிற்கானதே என சில நாடுகள் நியாயம் கற்பிக்க முயன்றாலும் அது ஒரு தப்பான எண்ணப்போக்கு என்ற பேராயர், அணுஆயுதப் போரில் வெற்றியாளர் என்று எவரும் இருக்கமாட்டார்கள், மாறாக பலியானவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் மட்டுமே இருப்பார்கள் என மேலும் உரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.