2011-07-20 16:41:28

தென் சொமாலியாவின் இரண்டு பகுதிகள் பஞ்சப் பகுதிகள் - ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவிப்பு


ஜூலை20,2011. கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தற்சமயம் கடும் வறட்சியை எதிர்கொள்ளும் தென் சொமாலியாவின் இரண்டு பகுதிகள் பஞ்சப் பகுதிகள் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சொமாலியாவின் தெற்கு Bakool மற்றும் Lower Shabelle பகுதிகளின் மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருகின்றது என்றுரைத்த ஐ.நா.நிறுவனம், கடந்த 19 ஆண்டுகளில் தற்போது அந்நாடு இத்தகைய பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளது என்று தெரிவித்தது.
சொமாலியாவில் அண்மை மாதங்களில் பஞ்சத்தால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் என்றும் உடனடியாக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (FAO) அறிவித்தது.
இம்மக்களுக்கு உதவுவதற்கென வருகிற திங்களன்று சர்வதேச அளவிலான உயர்மட்ட அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு ஜி-20 நாடுகள் அமைப்பின் தலைமையான பிரான்ஸ், FAO வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் FAOவின் 191 உறுப்பு நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் அரசு-சாரா அமைப்புகளும் ஐ.நா. நிறுவனங்களும் கலந்து கொள்ள பரிந்துரைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்காவில் ஒரு கோடிப்பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.