2011-07-19 16:33:55

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆர்வம் தேவை - ஈராக் பேராயர்


ஜூலை19,2011. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆர்வத்துடன் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து துவங்கவேண்டும் என ஈராக்கின் அனைத்து இன மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு பேராயர் லூயிஸ் சாக்கோ.
கிர்குக் கல்தேய ரீதி உயர்மறைமாவட்டமும், குர்திஸ்தான் பகுதியின் 'அச்சுறுத்தப்பட்டுள்ள மக்களுக்கான அமைப்பும்' இணைந்து நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட 150க்கும் மேற்பட்ட அரசியல் மற்றும் மதத்தலைவர்களுக்கு உரையாற்றிய பேராயர் சாக்கோ, நாட்டின் அனைத்து மதப்பிரிவினரிடையே அமைதியான இணக்க வாழ்வு இடம்பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பல்வேறு பிரிவுகள் இருப்பினும் ஐக்கியத்தில் வாழ முடியும் என்பதற்கும், பல்வேறு மதங்களும் சகிப்புத்தன்மையுடன் ஒன்றிணைந்து வாழமுடியும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக ஈராக் நாடு திகழ முடியும் என்றார் பேராயர். தனியார் நலன்களில் அரசியல், தனிப்பட்ட அக்கறை காட்டுவதாலேயே பிரிவினைகளும் மோதல்களும் பிறக்கின்றன என்ற அவர், ஐக்கிய முயற்சிகளுக்கே முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, பேச்ச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவேண்டிய மதங்களின் கடமையையும் வலியுறுத்தினார்.
மதத்தை அரசியலில் கலப்பதை நீக்கினாலே, பல்வேறு பிரச்னைகளுக்கு ஈராக்கில் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் பேராயர் சாக்கோ.








All the contents on this site are copyrighted ©.