2011-07-18 17:13:50

பத்து ஆண்டுகளில் 15.5 இலட்சம் கோடி ரூபாய் ஊழல்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்


ஜூலை 18, 2011. கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் 15.5 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என, புனேயைச் சேர்ந்த "இந்தியா போரன்சிக்' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில், ஊழல் என்ற பெயரில், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், 2,000 ரூபாய் வரை செலவிடுவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2000-09 ஆண்டுகளில், 70 ஆயிரத்து 773 ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டதாகவும், இவற்றில், ஊழலில் தொடர்புடைய 190 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, வர்த்தக மோசடி, கடத்தல், போதை மருந்து கடத்தல், வரி ஏய்ப்பு, வங்கி மோசடிகள் ஆகியவற்றால், நாட்டு பொருளாதாரத்துக்கு, 22 ஆயிரத்து 528 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, "சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் உள்ளது' என அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம், 50 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என இந்திய அரசியல்வாதிகளும், அரசு சார்பற்ற அமைப்புகளும் குறைகூறி வருகின்ற நிலையில், சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியோ, கடந்த 2010ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே என்கிறது.








All the contents on this site are copyrighted ©.