2011-07-18 16:56:34

ஜூலை 18 வாழ்ந்தவர் வழியில்.....


நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela) தென்னாப்ரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். கறுப்புக் காந்தி என அழைக்கப்படும் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர். தொடக்கத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லாப் போர்முறைத் தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. 1990ல் அவரது விடுதலைக்குப் பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்ரிக்கக் குடியரசு மலர்ந்தது. இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கும் நெல்சன் மண்டேலா, 1918ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பிறந்தார். இவர் 1993ல் அமைதி நொபெல் விருது பெற்றார். ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஜூலை 18ம் தேதியை, நெல்சன் மண்டேலா அனைத்துலக தினமாகக் கடைபிடிக்கிறது. இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாப்ரிக்காவை ஜனநாயக ஆட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடிய பின்னர் விடுதலையாகி, அரசுத் தலைவராக, அமைதி நொபெல் விருதின் சொந்தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்கின்றது.







All the contents on this site are copyrighted ©.