2011-07-16 15:36:32

ஞாயிறு சிந்தனை - திருவழிபாட்டு ஆண்டின் 16ம் ஞாயிறு


RealAudioMP3 தமிழக இயேசு சபையின் தொடக்ககாலப் பயிற்சி திண்டுக்கல்லில் உள்ள பெஸ்கி கல்லூரியில் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அங்கு நான் நவதுறவியாக இரு ஆண்டுகள் இருந்தபோது தினமும் மாலையில் வேலை நேரம் என்று ஒரு மணி நேரம் மண்வெட்டி எடுத்துக் கொண்டு களை எடுக்க முயற்சி செய்வோம். முதல் நாள் களை எடுத்தால், மூன்றாம் நாள் மீண்டும் முளைத்திருக்கும். ஒரு முறை நாங்கள் களை எடுத்துவிட்டு, ஒரு பகுதியில் தக்காளி கன்றுகளை வைத்தால், அவை வளரவில்லை; மாறாக, களைகள்தான் வளர்ந்திருந்தன. பெரும் கோபம் எனக்கு. கோபம் எதனால்? எனது அந்த எதிர்பார்ப்பால். களை வளராமல், தக்காளி கன்று மட்டும் வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பால்.
நான் நவ துறவியாக இருந்தபின், அதே பெஸ்கி கல்லூரியில் நவ துறவிகளுக்குப் பொறுப்பாளராக மாறினேன். அப்போதும் என்னிடம் இருந்த நவதுறவிகள் மண்வெட்டி கொண்டு களை பிடுங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். 70 வருடம் களை பிடுங்கிக் கொண்டிருக்கிறோம், மிகுந்த எதிர்பார்ப்போடு.
பகவத் கீதை சொல்கிறது: கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே, என்று. இதனை சமஸ்கிருத மொழியில் 'நிஷ்காம கர்மா' என்பார்கள். புனித இஞ்ஞாசியார் தனது ஆன்மீகப் பயிற்சிகளில் எந்தப் பணி செய்தாலும், முழு ஈடுபாட்டுடன் செய். முடிவைக் கடவுளிடம் விட்டுவிடு என்கிறார். வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்பார்ப்புகளின்றி செய்வதைத் தீவிரமான விருப்பத்துடன் செய்யுங்கள் என்று ஏன் சொல்கிறார்கள்? வெற்றியை மட்டும் எதிர்பார்க்கும்போது, அது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் நிழல்போலத் தொடர்ந்து வரும், தக்காளிக் கன்றோடு களைகளைப் போல. இன்றைய நற்செய்தியில் "ஐயா! உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தோம். அதில் களைகள் வளர்ந்தது எப்படி?" (மத். 13: 27) என்பதுபோல.
எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும், அங்கே ஏமாற்றத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். எங்கே ஏமாற்றம் இருக்கிறதோ, அங்கே எரிச்சல் தானாகவே வேகத் தடையாகக் குறிக்கிடும். காத்திருக்கப் பொறுமையில்லாமல் கவனம் சிதறும். மாறாக, இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடுவதுபோல், "வேண்டாம், விட்டுவிடுங்கள். முடிவில் நான் பார்த்துக் கொள்கிறேன்" (மத். 13: 29) என்பது எதிர்பார்ப்பை மணல் கோட்டையாகக் கட்டி வாழும் நமக்குப் புதுப் பாடமாகச் சொல்லித் தருவதாகப் படுகிறது.
வெற்றிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்று இன்று யோசித்துப் பாருங்கள். எதைச் செய்யவேண்டியிருந்தாலும், இதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்றுதான் மனம் முதலில் கணக்குப் போடுகிறது. வெற்றிபோல் ஏதாவது ஒன்று வசீகரித்து உங்களை முன்னால் இழுக்க வேண்டும். அல்லது, தோல்விபோல் ஏதாவது ஒன்று பயமுறுத்தி, பின்னிருந்து உங்களை உந்தித் தள்ள வேண்டும். கவனமாகப் பாருங்கள். வெற்றியும், தோல்வியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான். தனித் தனியே பிரிக்க முடியாதவை. நீங்கள் நெருக்கமாக நினைப்பவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடத் தயாராகத்தான் இருப்பீர்கள். ஆனால், பதிலுக்கு அவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உங்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் இருந்தால், அங்கே எமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் அதிகம். விவிலியத்தில் வரும் நிலக்கிழார்போல பொறுமை இல்லையென்றால், நீங்கள் வாழ்வில் குழப்பத்தைத்தான் சந்திப்பீர்கள்.
அதற்காக, நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்? ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதன் பெயர் அன்பு. ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பில் முழுமையான தீவிரம் இருக்கும். ஆனால், எதிர்பார்ப்பு இருக்காது.
இரண்டாம் உலகப் போர் நடந்த நேரம். ஜெர்மனியில் சிறைகள் நிரம்பி வழிந்தன. ஒரு குறிப்பிட்ட சிறை முகாமில் ஏராளமான யூதர்கள் மிருகங்களைப் போல் அடைத்து வைக்கப்பட்டதால், ஒவ்வொரு நாளும் கூடுதலாக இருக்கும் கைதிகளில் சிலருக்கு மரண தண்டனை கொடுத்து, எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். கைதிகள் எல்லாருக்கும் எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. தினமும் சில எண்கள் அழைக்கப்பட்டன. அழைக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இப்படி ஒரு நாள், ஒரு இளைஞனின் எண் அழைக்கப்பட்டது. அவன் சாக விரும்பவில்லை. நடுக்கத்துடன் ஒளிந்திருந்தான். அவனிடம், "உனக்குப் பதிலாக நான் சாகிறேன்" என்று சொல்லி அவன் எண்ணைத் தனக்கு மாற்றிக் கொண்டு இறந்தார் ஒரு குருவானவர். அவர்தான் புனிதரான மாக்சிமில்லியன் கோல்பே. அந்த இளைஞன் பல ஆண்டுகள் வாழ்ந்தான். அவனது உயிர் இன்னொருவர் போட்ட பிச்சை என்ற எண்ணம் அவன் மனதை வாட்டியது. அவனுக்குப் பதிலாய் இறந்த அந்தக் குரு அவனுடைய நண்பர் அல்ல, உறவினரும் அல்ல. அவர் இறந்தபோது, அவர் பெயர்கூட அவனுக்குத் தெரியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அடுத்தவருக்காகத் தன் உயிரையே விருப்பத்துடன் கொடுக்க அவரால் எப்படி முடிந்தது?
புனித மாக்சிமில்லியன் கோல்பே இறந்தாலும், தன் வாழ்வை முழுமையாக வாழ்ந்து விட்டார். தான் உயிரோடு பிழைத்திருந்தாலும், முழுமையாக வாழவில்லை என்பதை உள்ளுக்குள் அந்த இளைஞன் உணர்ந்தான். இந்த எடுத்துக்காட்டைச் சொன்னதால், உங்களை இதேபோல யாருக்காகவாவது உயிரைத் தியாகம் செய்யுங்கள் என்று நான் கூறவில்லை. மாக்சிமில்லியன் கோல்பே தான் செய்வது தியாகம் என்று நினைத்து எதையும் செய்யவில்லை. அவர் அன்பின் அர்த்தத்தை உணர்ந்திருந்தார். அடுத்தவரின் பயத்தையும், துன்பத்தையும் களைய அந்தச் சந்தர்ப்பத்தில் செய்யக் கூடியதை எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்தார்.
எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் எதையாவது தீவிரமாகச் செய்ய வேண்டுமென்றால் அதன் மீது பிரியம் வேண்டும். நீங்கள் கவனித்திருக்கலாம். மிகுந்த அறிவாளியாக இருப்பவர்களுக்கு அடுத்தவரிடத்தில் அன்பாகச் சிரித்துப் பேசக்கூடத் தெரியாது. அன்பாக இருக்கச் சொன்னால், எதற்காக என்று கேட்பார்கள். பலனைத் தெரிந்து கொள்ளாமல் செயல்பட மறுப்பார்கள். அன்பாக இருப்பதுதான் அடிப்படைப் புத்திசாலித்தனம் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.
முடிவைப் பற்றி சிந்தனை செய்யாதீர்கள். விவிலியம் கூறுவதுபோல், அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார். செய்யும் கடமையை, காரியத்தை முழுமையான அன்போடு, பிரியத்தோடு செய்து பாருங்கள். வெற்றிபற்றிக் கவலைப் படாமல், முழு அர்ப்பணிப்புடன் செய்து பாருங்கள். வெற்றியை எதிர்பார்க்காததால், தோல்வி பற்றிய பயம் வராது. பயம் இல்லாத இடத்தில் பதற்றம் இருக்காது. பதற்றமில்லாத இடத்தில் கவனம் சிதறாது. கவனம் சிதறாதபோது, செய்யும் செயலில் மகிழ்ச்சி இருக்கும். மகிழ்ச்சியுடன் செய்யும் செயலில் முழுத் திறைமையும் வெளிப்படும். வெற்றி நிச்சயம்.








All the contents on this site are copyrighted ©.