2011-07-16 15:08:54

சீனாவில் நடத்தப்படும் திருச்சபை சட்டத்துக்குப் புறம்பான ஆயர் திருநிலைப்பாடுகளுக்குத் திருத்தந்தை கண்டனம்


ஜூலை 16,2011. திருத்தந்தையின் ஒப்புதலின்றி திருநிலைப்படுத்தப்பட்ட சீன ஆயரைக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலக்குவதாக இச்சனிக்கிழமை திருப்பீடம் அறிவித்தது.
ஜூலை14, இவ்வியாழனன்று அருட்பணி Joseph Huang Bingzhang திருத்தந்தையின் ஒப்புதலின்றி திருநிலைப்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடம், இந்தத் திருநிலைப்பாட்டை ஏற்க வேண்டாமென்று திருப்பீடம் அக்குருவிடம் பலமுறைக் கேட்டிருந்தும் அவர் அதற்குப் பணியாததால் அவர் திருச்சபை சட்டம் 1382ன்படி திருச்சபையிலிருந்து விலக்கப்படுகிறார் என்று கூறியது.
அத்துடன், சீன அரசு, அந்நாட்டில் திருச்சபையை நடத்தும் முறை குறித்துத் திருத்தந்தை மிகுந்த கவலை அடைந்திருப்பதாகவும் தற்போதைய இன்னல்கள் கூடிய விரைவில் களையப்படும் என்று அவர் நம்புவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
சில ஆயர்கள் இந்தத் திருநிலைப்பாட்டில் கலந்து கொள்ளமாட்டோம் என்ற பலவழிகளில் எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் அதில் கலந்து கொள்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர், இதற்கு இவர்கள் இறைவன் முன்னிலையிலும், அகிலத் திருச்சபையின் முன்னிலையிலும் பாராட்டைப் பெறுகிறார்கள் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
அத்துடன், இந்தத் தங்களது ஆயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அருட்பணியாளர்கள், துறவிகள் மற்றும் விசுவாசிகளையும் பாராட்டுவதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
சீனக் கத்தோலிக்கர்கள் தங்களது மனசாட்சியைப் பின்பற்றிச் சுதந்திரமாகச் செயல்படவும் தூய பேதுருவின் வழிவருபவர் மற்றும் உலகளாவியத் திருச்சபையுடன் ஐக்கியமாக இருக்கவும் உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்றும் திருப்பீட அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
சீனாவில் 80 இலட்சம் முதல் ஒரு கோடியே 20 இலட்சம் வரையிலான கத்தோலிக்கர் உள்ளனர். இவர்கள் சீன அரசுக்குக் கீழ் இயங்கும் கத்தோலிக்கத் திருச்சபை, திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் மறைந்து வாழும் கத்தோலிக்கத் திருச்சபை என இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.