2011-07-16 15:29:22

'இலங்கை இறுதிப்போர் சம்பவங்கள் பற்றி ஆராய வேண்டும்' - இந்தியா


ஜூலை 16,2011 இலங்கை இறுதிப் போரில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய அரசு கருத்துத் தெரிவித்துள்ளது.
இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சானல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
சானல் 4 வெளியிட்ட இறுதிப் போர் தொடர்பான காட்சிகள் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவில்லாத நிலை உள்ளது. இது குறித்து இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். அது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகள் குறித்து ஆராயப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.