2011-07-15 15:59:27

தென் சூடானில் நிலையான அமைதி நிலவ மன்னிப்பும் ஒப்புரவும் தேவை – திருப்பீட அதிகாரி


ஜூலை15,2011. உலகின் 193வது நாடாக உருவாகியுள்ள தென் சூடான் குடியரசிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நிலையான அமைதி நிலவ மன்னிப்பும் ஒப்புரவும் தேவை என்று திருப்பீட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய தென் சூடான் குடியரசு, ஐ.நா.வின் உறுப்பு நாடாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையால் இவ்வியாழனன்று அங்கீகரிக்கப்பட்டு ஐ.நா.நிறுவனத்தில் தென் சூடான் கொடியும் பறக்கவிடப்பட்டது.
இதையொட்டிப் பேசிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட், குடிமக்களின் வாழ்வுக்கானப் பாதுகாப்பு, அவர்களின் சொத்துக்களை மீட்டல், அண்டை நாடுகளுடன் நல்லுறவுகள் உட்பட இப்புதிய நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது என்றார்.
தென் சூடானின் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு திருத்தந்தையின் அம்மக்களுக்கான ஆசீரையும் செய்தியையும் தான் வழங்கியதாகவும் ஃபீடெஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் பேராயர்.
பிற நாடுகளிலும் நாட்டிற்குள்ளேயும் புலம் பெயர்ந்துள்ள சுமார் மூன்று இலட்சம் மக்களைக் குடியமர்த்துவது, இப்புதிய நாடு செய்ய வேண்டிய உடனடிப் பணியாக இருக்கின்றது என்றும் பேராயர் சுல்லிக்காட் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.