2011-07-15 16:02:31

சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஓர் இலங்கைப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு இலங்கை ஆயர் பேரவை அழைப்பு


ஜூலை15,2011. சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஜானா நஃபீக் என்ற இலங்கை இசுலாமியப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு அப்பெண் விடுதலை செய்யப்படுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவில் தான் வேலை செய்து வந்த வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கிறார் ரிஜானா நஃபீக். இப்பெண் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலை செய்வதற்காகப் பொய்யானக் கடவுட்சீட்டுடன் சென்ற போது அவருக்கு வயது 17 ஆகும். இக்குற்றம் தொடர்பாக, இப்பெண்ணுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதியிருந்த ஒரு தாளில் இவர் கையெழுத்துப் போட்டதன் அடிப்படையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ரிஜானா நஃபீக்கின் விடுதலைக்காக விண்ணப்பித்துள்ள இலங்கை ஆயர்கள், அந்தக் குழந்தையை இழந்த பெற்றோருக்குத் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இப்பெண் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூழலைப் புரிந்து கொள்ளுமாறும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கூற்றுப்படி, உலகில் அதிக அளவில் மரணதண்டனை நிறைவேற்றும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும். 2009ம் ஆண்டின் இறுதியில் சவுதியில் 104 வெளிநாட்டவர் உட்பட குறைந்தது 141 பேர் மரணதண்டனை நிறைவேற்றப்படக் காத்திருந்தனர் என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அனைத்துலக மனித உரிமைகள் கழகம் கூறியது.
ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக இத்தண்டனைக்குப் பலியாகின்றனர் என்றும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியது.







All the contents on this site are copyrighted ©.