2011-07-14 16:04:55

மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகள், பாரம்பரியத் தனித்தன்மைகள் மற்றும் வேறுபாடுகளை மதிப்பதுடன் இடம்பெறவேண்டும் - கர்தினால் டர்க்சன்


ஜூலை 14,2011. அநீதிகளுக்கான காரணங்களுக்கு எதிராக அனைத்து மத சமூகங்களும் இணைந்து போரிடுவதற்கு அக்டோபர் மாதத்தின் அசிசி பல்மதக் கூட்டம் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் திருப்பீட அதிகாரி கர்தினால் பீட்டர் டர்க்சன்.
'உண்மையின் திருப்பயணிகள், அமைதியின் திருப்பயணிகள்' என்ற தலைப்பில் உலகின் அனைத்து மதப்பிரதிநிதிகளும் இத்தாலியின் அசிசி நகரில் கூடுவதற்கு திருத்தந்தை விடுத்துள்ள அழைப்புப் பற்றிக் குறிப்பிட்ட, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன், அனைத்து முயற்சிகளின் முதல் நோக்கமாக, வாழ்விற்கான உரிமை பாதுகாக்கப்படுவது இருக்கவேண்டும் எனவும், மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகள் அந்தந்த மதங்களின் பாரம்பரியத் தனித்தன்மைகள் மற்றும் வேறுபாடுகளை மதிப்பதாகவும் இருக்கவேண்டும் என்றார்.
ஒவ்வொரு மதத்தின் நீதி மற்றும் அமைதிக்கான அர்ப்பணம் என்பது சமூகத்தின் பொதுநலனுக்கான ஒத்துழைப்பிற்கு அவர்களைத் தூண்ட முடியும் என்ற கர்தினால், ஒவ்வொரு மதமும் தங்களுக்கேயுரிய சொத்தான ஆன்மீக வளங்கள் மற்றும் மதிப்பீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.