2011-07-13 16:12:02

ஜூலை 14, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


டோக்கியோவில் 1919ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர்.
1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அப்போது இவரது கவனம் திராவிட மொழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.
தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999ல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். ஜப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் பிரதிகள் விற்பனை ஆயின
தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.
1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் ஜப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். ஜப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார். இவையெல்லாம் தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன.
உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் ஜப்பானிய உறவு பற்றிய கட்டுரைகள் படித்தார். 1999 இல் தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும் மொழியியல் அறிஞர்களை ஜப்பானுக்கு அழைத்துத் தமிழ் ஜப்பானிய மொழி உறவு பற்றிப் பேசினார். இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டு ஜப்பானிய மொழியில் வெளிவந்தன.
தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். ஜப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார். தமிழுக்கும் ஜப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89ம் வயதில் 2008ம் ஆண்டு ஜூலை 14ம் நாள் டோக்கியோவில் இயற்கை எய்தினார்.








All the contents on this site are copyrighted ©.