2011-07-12 14:21:21

விவிலியத் தேடல் – திருப்பாடல் 51


ஜூலை12,2011. அ RealAudioMP3 ல்ஜான்சன். இவர் தனது 19வது வயதில் இரண்டு பேருடன் சேர்ந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் கான்சாஸ் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். ஒருநாள் வாகன விபத்தில் இரண்டு குற்றவாளிகள் சிக்கி உயிரிழந்தனர். இறந்த அந்த இருவரும் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று வங்கி அதிகாரிகள் தவறாகக் கூறியதால் அந்தக் கொள்ளை குறித்த வழக்கு அப்படியே மூடப்பட்டு விட்டது. எனவே இனிமேல் இந்தக் குற்ற வழக்கில் தான் பிடிபடமாட்டோம் என்பது அல்ஜான்சனுக்கு உறுதியாகி விட்டது. சில ஆண்டுகள் கழித்து அல்ஜான்சன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு கிறிஸ்தவர் போல நடித்து வாழத் தொடங்கினார். அந்தப் பெண்ணுக்கு அவரின் கடந்த காலக் குற்றம் குறித்து எதுவுமே தெரியாது. ஒருநாள் அல்ஜான்சனுக்கு யாரோ ஒருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். “கடவுளின் மீட்புத் திட்டம்” என்ற தலைப்பில் அந்த மின்னஞ்சல் வந்தது. அதை வாசித்த போது குறிப்பாக, “ஆண்டவரின் பெயரை அழைப்பவர்கள் மீட்படைவார்கள்” என்ற வரிகள் அல்ஜான்சனது உள்ளத்தில் ஏதோ செய்தன. தனக்கும் மன்னிப்பு கிடைக்கும், தானும் மீட்கப்படுவேன், தனது மனசாட்சியும் உறுத்தலின்றி விடுதலை பெறும், தானும் கடவுளுக்குள் வாழ முடியும் என்று உணர்ந்தார். தான் செய்த குற்றத்தை மறைத்து வாழும் கோழைத்தனம் அவரை வதைத்தது. குற்றமுள்ள அவரை வெட்கப்பட வைத்தது. அல்ஜான்சன் தான் செய்த பாவத்தை உணர்ந்து தனது பாவ நிலையை வெறுத்தார். ஒரு முடிவுக்கும் வந்தார். தனது பாவநிலையைவிட்டு விலக உறுதி பூண்டார். பொய் சொல்லி ஏமாற்றி வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட நினைத்தார். இனிமேல் இத்தகைய பொய்பேசும் வாழ்க்கைத் தேவையில்லை என்பதில் தெளிவடைந்தார். எனவே அல்ஜான்சன் தனது வங்கிக் கொள்ளைக் குற்றத்தைத் தொலைக்காட்சி செய்தியிலும் தினத்தாள்களிலும் அறிவித்தார். அவரும் கிறிஸ்துவுக்குள் புது மனிதனானார்.
அன்பு நெஞ்சங்களே, தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு நல்ல மனசாட்சி வேண்டும். அப்படி தனது குற்றத்தை நேர்மையுடன் ஒப்புக் கொள்ளும் போது அது ஒருவருடைய வாழ்க்கையை அப்படியே மாற்றிவிடுகின்றது. புது மனிதனாக்கி விடுகின்றது. இறைவனுக்குள் வாழும் வாழ்வை வழங்குகிறது. ஒருவர் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்கும் போது அவர் பக்குவப்பட்ட, பொறுப்பான ஒரு மனிதனாக மாறுகின்றார். இதனை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஒருவர் தனது தவற்றை ஒளிவுமறைவின்றி ஏற்றுக் கொள்ளுதல், அவரது வாழ்க்கை மாற்றம் அடைவதற்கு இன்றியமையாதது ஆகும். ஆனால் இன்றைய நம் சமுதாயங்களில் குற்றம் செய்தவர்கள் அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதையே பொதுவாக நாம் பார்க்கிறோம். அரசியல்வாதிகள், ஆன்மீவாதிகள் முதல் சிறு குழந்தை வரை தவறுகளை ஏற்பதற்கு கஷ்டப்படுகின்றனர். ஒரு டம்ளரை கீழே போட்டு உடைத்த குழந்தையிடம் அம்மா கேட்டால், இதை நான் செய்யவில்லை, டம்ளர் கீழே விழுந்து விட்டது என்றுதான் குழந்தை உடனடியாகச் சொல்லும்.
பொதுவாக, ஒரு சிறு காரியத்திலும் தவறை ஏற்பது என்பது அவ்வளவு கடினமாக இருக்கின்றது. ஈகோ என்று சொல்கிறோமே அதற்கு அவ்வளவு வலிமை. தன்னைப் பற்றி யார் குறை சொன்னாலும் அதை ஏற்பதற்கு தயக்கம். இன்றைய அரசியலிலும் இதுதான் நடக்கின்றது. பெரிய பெரிய ஒட்டகங்களை முழுங்கியதாகச் சொல்லப்படுபவர்கள்கூட நான் நிரபராதி என்றுதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது உலகப் படைப்பின் முதல் மனிதர்கள் ஆதாம் ஏவாளிலே தொடங்கி விடுகின்றது. கடவுள் ஆதாமிடம், ஏன் இந்த விலக்கப்பட்ட மரத்தின் கனியைச் சாப்பிட்டாய் என்று கேட்ட போது, ஆதாம், “ஆண்டவரே, நான் சாப்பிடவில்லை, ஏவாள்தான் கொடுத்தாள்” என்றார். அதேபோல் ஏவாளும் தனது குற்றத்திற்குப் பாம்பைக் குறை சொன்னாள்.
ஒருவர் தனது குற்றத்தை, தனது தவறை ஒப்புக் கொள்ளுதல் மனம் திரும்புவதற்கு முதற்படியாகும். தனது வாழ்க்கையை மாற்றுவதற்கு முக்கியமானதாகும். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேலில் புகழ் பெற்ற அரசராகத் திகழ்ந்த தாவீது, தனது வாழ்க்கையில் நடந்த ஒரு பெருங் குற்றத்தை எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதை வேத புத்தகம் 2சாமுவேல் பிரிவுகள் 11 மற்றும் 12களில் வாசிக்கிறோம். ஒரு மாலைவேளையில் மன்னன் தாவீது, மாடியில் உலாவிக் கொண்டிருந்த போது பத்சேபா என்ற அழகிய பெண் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவளது அழகில் மயங்கினார். அப்பெண் உரியா என்பவரின் மனைவி என்பதையும் அறிந்தார். அவளை மாளிகைக்கு வரவழைத்தார். அவளோடு உறவு கொண்டார். பின்னர் வீட்டிற்குத் திரும்பினாள் பத்சேபா. அவள் கருவுற்றிருக்கும் செய்தி அறிந்து போர்களத்திலிருந்த உரியாவை வீட்டிற்குச் செல்லுமாறு பணித்தார் அரசர். ஆனால் பிரமாணிக்கமுள்ள ஊழியனாகிய உரியா, மற்றவர்கள் எல்லாம் போர்க்களத்தில் இருக்கும் போது நான் மட்டும் வீட்டில் உண்டு மகிழ்வதா? என்று சொல்லி வீடு செல்ல மறுத்துவிட்டார். எனவே தாவீது உரியாவைத் தந்திரமாகப் போர்களத்தில் மடியச் செய்தார். பத்சேபாவை தனது மனைவியாக்கிக் கொண்டார். தாவீதின் இச்செயலைக் கேள்விப்பட்ட இறைவாக்கினர் நாத்தான் வெகுண்டெழுந்தார். மன்னரிடம் வந்து அவரது தவற்றை ஓர் உருவகக் கதை மூலம் இடித்துரைத்தார்.
உடனே, மன்னன் தாவீது தனது பாவத்தை உணர்ந்தார். பாவம் செய்து விட்டேனே என்று புலம்பினார். இறைவாக்கினர் நாத்தானிடம் சொல்கிறார்...
நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்.....
மன்னன் தாவீது பாவ மன்னிப்புக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். அவர் இஸ்ரயேலின் அரசர்தான். தான் அதனைச் செய்யவில்லை என்றோ, அதற்கு அடுத்தவனைக் குற்றவாளி என்றோ, யாரையும் தனக்குப் பதிலாகச் சுட்டிக் காட்டவில்லை. அதேசமயம், தான் அடுத்தவனின் மனைவியை உரிமையாக்கிக் கொண்ட குற்றத்தை, உரிமையாக்கியதோடு அவனை வாளுக்கு இரையாக்கிய பாவத்தை நேர்மையுடன் ஒப்புக் கொண்டார். அதற்கு நாத்தான், ஆண்டவரும் உன் பாவத்தை நீக்கிவிட்டார். ஆனால் உனக்கும், பத்சேபாவுக்கும் பிறக்கும் குழந்தை சாகவே சாகும் என்ற கடவுளின் தண்டனையையும் அறிவித்தார். மன்னன் தாவீதும், அவர்களுக்குப் பிறந்த மகனுக்காக உண்ணா நோன்பிருந்து இரவெல்லாம் தரையில் படுத்து தபம் இருந்தார். ஆனாலும் பிள்ளை இறந்தான் என்று வேத புத்தகம், 2 சாமுவேல் 12, 18ல் வாசிக்கிறோம்.
அன்பு நெஞ்சங்களே, மன்னன் தாவீது இந்தத் தனது பாவத்தை நினைத்து நினைத்து அழுது ஆண்டவரின் இரக்கத்திற்காக மன்றாடிய திருப்பாடல்தான் 51. இது தவநிலைத் திருப்பாக்களில் நான்காவது பாடலாகும். 6,32,38,51,102,130,143 ஆகிய திருப்பாடல்கள் எல்லாமே ஆண்டவரிடம் பாவத்தை அறிக்கையிட்டு அவரது மன்னிப்புக்காக இறைஞ்சுவதாக இருக்கின்றன. திருப்பாடல் 51ல் ....
“கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார்வையில் தீயது செய்தேன்..... கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை....”
மன்னர் தாவீது, தனது உண்மையுள்ள ஊழியன் உரியாவுக்கு எதிராகச் செய்த பாவம் கடவுளுக்கு எதிராகச் செய்த பாவமாகும். மனிதன் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டவன். எனவே எந்த ஒரு மனிதனுக்கு எதிராகப் பாவம் செய்வது கடவுளுக்கு எதிராகவேச் செய்வதாகும். ஆயினும் குற்றமுணர்ந்த நொறுங்கிய உள்ளத்தைக் கடவுள் ஒருநாளும் புறக்கணிப்பதில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லாத இவர் நல்லோருக்கும் தீயோருக்கும் பாரபட்சமின்றி மழையைப் பொழிபவர். அந்தக் கடவுளின் மன்னிப்புக்கும் அன்புக்கும் ஈடு இணையே கிடையாது. பழைய ஏற்பாட்டில் நெறிகெட்ட வாழ்க்கை வாழ்ந்து பாவச்சேற்றில் உழன்று கொண்டிருந்த நினிவே மக்கள் இறைவாக்கினர் யோனா எச்சரித்ததைக் கேட்டு அரசன் முதல் சாதாரண குடிமகன் வரை தபம் இருந்து கடவுளின் மன்னிப்பை மன்றாடினர். நினிவே அரசன் தனது அரச உடைகளைக் களைந்து சாக்கு உடை உடுத்தி சாம்பல் மீது அமர்ந்து தவம் இருந்தான். கடவுளின் கருணைப் பார்வைக்காகச் செபித்தான். கடவுளும் அந்நகரை அழிக்காமல் விட்டார் என்று யோனா புத்தகத்தில் வாசிக்கிறோம்.
தெயோதோசியுஸ் (Theodosius) என்பவர் அக்கால உரோமைப் பேரரசின் கிறிஸ்தவப் பேரரசர்களில் ஒருவர். இவர் தனது பேரரசில் கிழக்கையும் மேற்கையும் ஒன்றிணைப்பதில் மிகவும் கஷ்டப்பட்டார். கிரேக்கத்தில் தெசலோனிக்கா நகர மக்கள் உரோமை ஆளுனரைக் கொன்று போட்டனர். எனவே அதற்குப் பழிவாங்கும் படலமாக, பேரரசர் தெயோதோசியுஸ் அந்நகரின் பெருமளவான குடிமக்களைக் கொன்று குவித்தார். அவர் உரோமைக்குத் திரும்பிய போது அப்போதைய ஆயர் அம்புரோஸ், பேரரசரைத் திருஅவைக்குள் ஏற்க மறுத்துவிட்டார். பேரரசரர் தான் செய்த பாவத்துக்காக மனம் வருந்தினாலொழிய திருஅவைக்குள் சேர்க்கப்பட மாட்டார் என்று உறுதியாகச் சொல்லி விட்டார் ஆயர். பேரரசரும் ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல, ஒருமாத காலம், பழிவாங்கிய தனது செயலுக்காக மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பை வேண்டினார். “ஆண்டவரே, நான் பாவி, என்மேல் இரக்கம் வையும்” என்று செபித்தார்.
அன்பர்களே, தவறுகளை நேர்மையுடன் ஒப்புக்கொள்ளுதல், பாவத்தின் தீமையை உணர்தல், அதற்காக மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பை வேண்டுதல் ஒருவரை நல்ல மனிதனாக மாற்றும். நல்ல மனிதனாக உலகுக்குக் காட்டும். மனமகிழ்ச்சியான வாழ்வை அவனுக்கு வழங்கும்.
செபிப்போமா.....
கடவுளே, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.....
கடவுளே, தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.....







All the contents on this site are copyrighted ©.