2011-07-11 16:59:10

குழந்தைகளின் எதிர்கால வாழ்வைச் சீரழிக்கும் தொலைக்காட்சி: ஆய்வில் தகவல்


ஜூலை 11,2011. தொலைக்காட்சியில் வரும் வன்முறை நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதால், அவர்களின் தூக்கம் கெடுகிறது மற்றும் எதிர்கால வாழ்க்கையில் உடல் பருமன், பள்ளிக்குச் செல்லாமை போன்ற மோசமான விளைவுகளும் ஏற்படுகிறது என அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள சியாட்டில் குழந்தைகள் ஆய்வு நிறுவனம் மூன்று முதல் ஐந்து வயதுள்ள 600 குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் ஆய்வுக்கு எடுத்து, அது குறித்து வெளியிட்டுள்ள முடிவில், வளரும் குழந்தைகளின் தூக்கத்தைப் பாதிப்பதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும், கேலிச்சித்திரங்கள், நேரடி ஒளிபரப்புகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலேயே பெரும்பாலும் வன்முறையைத் தூண்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன எனவும் கூறியுள்ளது. எவ்வளவு நேரம் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கின்றனர், மற்றும் அதில் எவ்வளவு நேரம் வன்முறை நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன என்பது குறித்தும் பெற்றோர் குறைவான மதிப்பீடு செய்கின்றனர் என்கிறார் இதில் கலந்து கொண்ட ஆய்வாளர் மைக்கெல் காரிசன்.
"பொதுவாக காட்டப்படும் நிகழ்ச்சிகளில் எது உண்மையானது, எது உண்மை இல்லாதது என்பது குறித்து குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியாது. எனவே இரவு நேரங்களில் வன்முறையைத் தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது" என்று எச்சரித்துள்ளார் மியாமி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் நீனா மாலிக்







All the contents on this site are copyrighted ©.