2011-07-11 16:57:07

இயற்கையை மதிப்பது குறித்து பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய பெற்றோரின் கடமை


ஜூலை 11,2011. இயற்கையை மதித்து வாழ்வது குறித்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செபத்தை மக்களுடன் இணைந்து செபித்தபின் இவ்விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை, இந்த கோடை விடுமுறைக் காலத்தில் இயற்கையின் அழகையும் அற்புதத்தையும் குறித்துச் சிந்தித்து, உணர்வுகளை உயிரோட்டமுடையதாக வைத்திருக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இறைவன் வழங்கியுள்ள மிகப்பெரும் கொடையான இயற்கையை இரசிக்கவும், மதிக்கவும், பாதுகாக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பெற்றோரின் கடமையையும் வலியுறுத்தினார் பாப்பிறை.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட கடல் ஞாயிறு குறித்தும் எடுத்துரைத்த
அவர், மாலுமிகள், மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களிடையே மேய்ப்புப் பணியாற்றுவோரைச் சிறப்பான விதத்தில் நினைவு கூர்வதாகத் தெரிவித்தார்.
கடற்கொள்ளைக்காரர்களின் பிடியிலிருக்கும் மாலுமிகளுக்கானத் தன் செப உறுதிப்பாட்டையும் இம்மூவேளை செப உரையின் போது எடுத்துரைத்தார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.